2
தானியக் காணிக்கை
“ ‘யாராவது ஒருவன் யெகோவாவுக்கு ஒரு தானியக் காணிக்கையைக் கொண்டுவரும்போது, அவனுடைய காணிக்கை சிறந்த மாவினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். அவன் அதன்மேல் எண்ணெய் ஊற்றி அதன்மேல் நறுமணத்தூளைப் போடவேண்டும். அந்தக் காணிக்கையை ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியர் நறுமணத்தூளுடன் சேர்த்து, சிறந்த மாவையும் எண்ணெயையும், ஒரு கைப்பிடியளவு எடுக்கவேண்டும். இதை ஒரு ஞாபகார்த்தப் பங்காக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை. மீதமுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சொந்தமானது; யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளில் இது ஒரு மகா பரிசுத்தமான பங்கு.
“ ‘நீங்கள் அடுப்பில் சுடப்பட்ட ஒரு தானியக் காணிக்கையைக் கொண்டுவந்தால், அது சிறந்த மாவினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். அது புளிப்பில்லாமல் எண்ணெய் கலந்து சுடப்பட்ட அடை அப்பமாகவோ அல்லது புளிப்பில்லாமல் எண்ணெய் தடவி சுடப்பட்ட அதிரசமாகவோ இருக்கவேண்டும். நீ கொடுக்கும் தானியக் காணிக்கை தட்டையான இரும்பு வலைத்தட்டியில் சுடப்படுவதானால் அது புளிப்பில்லாமல் எண்ணெய் கலந்து, சிறந்த மாவினால் செய்யப்படவேண்டும். அதை நொறுக்கி அதன்மேல் எண்ணெய் ஊற்று. இது ஒரு தானியக் காணிக்கை. உனது தானியக் காணிக்கை, தட்டையான சட்டியில் சமைக்கப்பட்டதானால், அது சிறந்த மாவினாலும், எண்ணெயினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பொருட்களினால் செய்யப்பட்ட தானியக் காணிக்கையை யெகோவாவிடத்தில் கொண்டுவாருங்கள்; அதை நீங்கள் ஆசாரியரிடம் கொடுக்கவேண்டும். அவன் அதைப் பலிபீடத்திற்குக் கொண்டுபோவான். ஆசாரியன் தானியக் காணிக்கையிலிருந்து ஞாபகார்த்தப் பங்கை தனியாக எடுத்து அதைப் பலிபீடத்தின்மேல் எரிப்பான். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை. 10 மீதமுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொந்தமானது. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளில் இது ஒரு மகா பரிசுத்தமான பங்கு.
11 “ ‘யெகோவாவிடத்தில் நீங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு தானியக் காணிக்கையும் புளிப்பில்லாமல் செய்யப்படவேண்டும். ஏனெனில் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையில், புளிப்பூட்டும் பதார்த்தத்தையோ தேனையோ எரிக்கக்கூடாது. 12 நீ அவற்றை உன் முதற்பலனின் காணிக்கையாக யெகோவாவிடம் கொண்டுவரலாம். ஆனால் அவை பலிபீடத்தின்மேல் மகிழ்ச்சியூட்டும் நறுமணமாகச் செலுத்தப்படக்கூடாது. 13 உங்கள் தானியக் காணிக்கைகளையெல்லாம் உப்பினால் சாரமாக்குங்கள். உங்கள் இறைவனின் உடன்படிக்கையின் நித்தியத்தைக் காண்பிக்க உப்பை உங்கள் தானியக் காணிக்கைகளிலிருந்து விலக்கவேண்டாம். உங்களுடைய எல்லா காணிக்கைகளோடும் உப்பைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
14 “ ‘முதற்பலன்களின் தானியக் காணிக்கையை யெகோவாவிடம் கொண்டுவருவதானால், நெருப்பில் வாட்டப்பட்டு கசக்கப்பட்ட புதிய தானிய கதிர்களைச் செலுத்தவேண்டும். 15 அதன்மேல் எண்ணெயையும், நறுமணத்தூளையும் போடுங்கள். இது ஒரு தானியக் காணிக்கை. 16 ஆசாரியர் அதை நறுமணத்தூளுடன் சேர்த்து, கசக்கப்பட்ட தானியத்திலும், எண்ணெயிலும் ஞாபகார்த்தப் பங்கை யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக எரிப்பான்.