4
யெகோவாவின் மலை புதுப்பிக்கப்படுதல்
கடைசி நாட்களிலே,
யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை,
எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்;
எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும்,
எல்லா மக்கள் கூட்டமும் அதை நாடி ஓடி வருவார்கள்.
அநேக நாடுகள் வந்து,
“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம்,
யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம்.
நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு
அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள்.
சீயோனிலிருந்து அவரது சட்டமும்,
எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும்.
அநேக மக்கள் கூட்டங்களிடையே அவர் நியாயம் விசாரித்து,
எங்கும் பரந்து தூரமாயுள்ள வலிமைமிக்க
நாடுகளின் வழக்குகளை அவர் தீர்த்துவைப்பார்.
அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும்,
தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள்.
அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை,
போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை.
ஒவ்வொருவனும் தன் சொந்த திராட்சைக்கொடியின் கீழேயும்,
தன் சொந்த அத்திமரத்தின் கீழேயும் சுகமாய் இருப்பான்.
ஒருவரும் அவர்களைப் பயமுறுத்தமாட்டார்கள்.
ஏனெனில் சேனைகளின் யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.
எல்லா மக்கள் கூட்டங்களும்
தங்கள் தெய்வங்களின் பெயரில் நடந்தாலும்,
நாங்களோ எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பெயரிலேயே
என்றென்றும் நடப்போம் என்று சொல்வார்கள்.
யெகோவாவின் திட்டம்
யெகோவா அறிவிக்கிறதாவது:
“அந்த நாளில் நான் முடவர்களை ஒன்றுசேர்ப்பேன்,
நாடுகடத்தப்பட்டோரையும்,
என்னால் துன்பத்திற்கு உட்பட்டோரையும் கூட்டிச்சேர்ப்பேன்.”
நான் எஞ்சியிருக்கும் முடவர்களையும்,
துரத்தப்பட்டவர்களையும் ஒரு வலிமைமிக்க நாடாக்குவேன்.
அந்த நாளிலிருந்து என்றென்றைக்குமாக,
யெகோவாவாகிய நானே சீயோன் மலையிலிருந்து அவர்களை அரசாளுவேன்.
எருசலேமே, மந்தையின் காவற்கோபுரமே,
சீயோன் மகளின் கோட்டையே, உனக்கோவென்றால்:
முந்தைய ஆட்சியுரிமை உனக்கே திரும்பக் கொடுக்கப்படும்;
அரசுரிமை உன் மகளுக்கே வரும்.
 
இப்பொழுது நீ ஏன் சத்தமிட்டு அழுகிறாய்?
பிரசவிக்கும் பெண்ணைப்போல் ஏன் வேதனைப்படுகிறாய்?
உனக்கு அரசன் இல்லையோ?
உன் ஆலோசகனும் அழிந்து போனானோ?
10 சீயோன் மகளே,
பிரசவிக்கும் பெண்ணைப்போல் துடித்து வேதனைப்படு.
ஏனெனில் நீ நகரத்தைவிட்டு
விரைவில் வெளியே போகவேண்டும்.
திறந்தவெளியில் முகாமிடவேண்டும்.
நீ பாபிலோனுக்குப் போவாய்.
ஆனால் அங்கிருந்து நீ தப்புவிக்கப்படுவாய்.
உன் பகைவர்களின் கைகளினின்றும் யெகோவாவாகிய நானே உன்னை மீட்டுக்கொள்வேன்.
 
11 ஆனால், இப்பொழுது அநேக நாடுகள்
உனக்கெதிராய் கூடியிருக்கிறார்கள்.
அவர்கள், “சீயோன் மாசுபடட்டும்,
நம் கண்கள் அதைக்கண்டு கேலிசெய்து மகிழட்டும்” என்று சொல்கிறார்கள்.
12 ஆனால் அவர்களோ, யெகோவாவின் சிந்தனைகளை அறியாதிருக்கிறார்கள்.
அவரது திட்டத்தையும் அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
அவர் அவர்களைக் கதிர்க்கட்டுகளைப்போல் ஒன்றுசேர்த்து
சூடடிக்கும் களத்திற்கு அடிக்கக்கொண்டு வருவார்.
13 யெகோவா சொல்கிறதாவது: “சீயோன் மகளே, எழுந்து போரடி.
நான் உனக்கு இரும்பு கொம்புகளைக் கொடுப்பேன்.
நான் உனக்கு வெண்கல குளம்புகளைக் கொடுப்பேன்.
அவற்றால் நீ அநேக மக்கள் நாடுகளை மிதித்துத் துண்டுகளாக நொறுக்குவாய்.
அவர்கள் நல்லதல்லாத வழியில் சம்பாதித்த ஆதாயத்தையும்,
அவர்களின் செல்வத்தையும் பூமி முழுவதற்கும் யெகோவாவாகிய எனக்கே ஒப்படைப்பாய்.”