18
பரலோக அரசில் யார் பெரியவன்
அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள்.
அவர் ஒரு சிறுபிள்ளையை தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் மனமாற்றம் அடைந்து சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள். ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப்போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கிறான்” என்றார். “இப்படி ஒரு சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.
பாவம் செய்யப்பண்ணுதல்
“என்னில் விசுவாசம் வைத்துள்ள, இந்தச் சிறியவர்களில் எவரையாவது பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். மக்களைப் பாவத்தில் விழப்பண்ணும், காரியங்களின் நிமித்தம், உலகத்திற்கு ஐயோ! இப்படிப்பட்ட காரியங்கள் வரவேண்டியதே. ஆனால் யார் மூலம் அது வருகிறதோ அந்த மனிதனுக்கு ஐயோ! உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது.
வழிதப்பிய ஆட்டைப்பற்றிய உவமைக் கதை
10 “நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைத்தூதர்கள் எனது பரலோக பிதாவின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 11 ஏனெனில் மானிடமகன் வழிதப்பிப் போனவர்களை இரட்சிக்கவே வந்தார்.*
12 “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போகமாட்டானோ? 13 நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழிதவறிப் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட, அந்த ஒரு ஆட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான். 14 அதுபோலவே இந்தச் சிறியவர்களில் ஒருவனும் வழிதவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் விருப்பமல்ல.
பாவம் செய்யும் சகோதரர்கள்
15 “உன் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உனக்கு எதிராகப் பாவம்செய்தால், நீ போய் அவருடைய குற்றத்தை அவருக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே அது செய்யப்படட்டும். அவர் உனக்குச் செவிகொடுத்தால், நீ உனது சகோதரன் அல்லது சகோதரியை இழக்காமல் காத்துக்கொள்வாய். 16 ஆனால் அவர் உனக்குச் செவிகொடாவிட்டால், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படும்படி,’ வேறு ஒருவரையோ இருவரையோ உன்னுடன்கூட கூட்டிக்கொண்டுபோ. 17 அவர் அவர்களுக்கும் செவிகொடுக்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; அவர் திருச்சபைக்கும் செவிகொடுக்க மறுத்தால், அவரை இறைவனை அறியாதவரைப் போலவும் வரி வசூலிக்கிறவரைப் போலவும் நடத்து.
18 “மேலும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் எதைப் பூமியில் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீங்கள் பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்.
19 “மீண்டும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது உங்களுக்காகச் செய்யப்படும். 20 ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரில் ஒன்றாய்கூடி இருக்கிறார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்றார்.
இரக்கமற்ற வேலையாள்
21 அதற்குப் பின்பு பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை வரைக்குமோ?” எனக் கேட்டான்.
22 இயேசு மறுமொழியாக, “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது முறைக்கும் அதிகமாக” என்று நான் உனக்குச் சொல்கிறேன் என்றார்.
23 “பரலோக அரசானது ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்ததுபோல் இருக்கிறது. 24 அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்து கோடி பொற்காசுகள் கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான். 25 அவனோ அதைச் செலுத்தமுடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடத்தில் உள்ளவை எல்லாவற்றையும் விற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான்.
26 “வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக்கேட்டான். 27 வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான்.
28 “ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகளை கடன்பட்டிருந்த தன் உடன்வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து தொண்டையை நெரித்து, ‘நீ என்னிடத்தில் கடன்பட்டதைத் திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான்.
29 “அவனுடைய உடன்வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக்கேட்டான்.
30 “ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும் வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான். 31 நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் அரசனிடம் போய்ச் சொன்னார்கள்.
32 “அப்பொழுது அரசன் அந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடனையெல்லாம் மன்னித்தேன். 33 நான் உனக்கு இரக்கம் காட்டியது போல, நீயும் உனது உடன்வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான். 34 அவனுடைய எஜமான் கோபங்கொண்டு, அவனது கடன் முழுவதையும் கொடுத்துத் தீர்க்கும்வரை அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான்.
35 “நீங்களும் உங்கள் சகோதரன் அல்லது சகோதரியை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களை நடத்துவார்” என்றார்.
* 18:11 18:11 சில கையெழுத்துப் பிரதிகளில் லூக். 19:10 இல் இருக்கிற வார்த்தைகள் இந்த இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 18:16 18:16 உபா. 19:15 18:24 18:24 பத்து கோடி பொற்காசுகள் என்பது மூல பாஷையில் பத்தாயிரம் தாலந்து.