சங்கீதம் 138
தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;
“தெய்வங்கள்” முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன்.
நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து,
உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும்,
உமது பெயரைத் துதிப்பேன்;
ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாக
உமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர்.
நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்;
நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர்.
 
யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும்
உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும்.
யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,
அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
 
யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,
தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்;
ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார்.
துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும்,
நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர்.
என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்;
உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர்.
யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்;
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது;
உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும்.