சங்கீதம் 84
கித்தீத் என்னும் இசையில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
1 சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,
உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது!
2 என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காக
ஏங்கித் தவிக்கிறது;
என் உடலும் உள்ளமும்
உயிருள்ள இறைவனை நோக்கி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது.
3 என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,
உம்முடைய பீடத்தினருகே
அடைக்கலான் குருவிக்கு வீடும்,
இரட்டைவால் குருவிக்குத்
தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே.
4 உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பார்கள்.
5 உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
தங்கள் உள்ளத்தை சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள்மேல் பதித்துள்ளார்கள்.
6 அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில்,
அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்;
முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது.
7 அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும்,
பலத்தின்மேல் பலம் அடைகிறார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;
யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும்.
9 எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்;
நீர் அபிஷேகம் பண்ணியவரின் முகத்தை தயவுடன் பாரும்.
10 உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது,
வேறெங்காவது ஆயிரம் நாட்களைக் கழிப்பதைவிட சிறந்தது;
கொடியவர்களின் கூடாரங்களில் குடியிருப்பதைவிட,
என் இறைவனுடைய வீட்டில் வாசல் காவலனாக இருப்பதை நான் அதிகமாய் விரும்புவேன்.
11 ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்;
யெகோவா கிருபையையும் மகிமையையும் கொடுப்பார்;
குற்றமற்றோராய் நடப்போருக்கு
அவர் நன்மையானவற்றைக் கொடாமல் இருப்பதில்லை.
12 சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,
உம்மில் நம்பிக்கையாயிருக்கிற மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.