12
சீஷாக் எருசலேமைத் தாக்குதல்
ரெகொபெயாம் தன்னை அரசனாக நிலைப்படுத்தி, வல்லமையடைந்தபின், அவனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் யெகோவாவினுடைய சட்டத்தைக் கைவிட்டார்கள். அவர்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருந்தபடியினால், எகிப்திய அரசனான சீஷாக் அரசன் ரெகொபெயாம் அரசாண்ட ஐந்தாம் வருடம் எருசலேமைத் தாக்கினான். அவன் 1,200 தேர்களுடனும், 60,000 குதிரைவீரர்களுடனும் வந்தான். அத்துடன் எகிப்திலிருந்து லிபியர், சூக்கியர், கூஷியர்* அடங்கிய எண்ணற்ற படையுடனும் வந்தான். அவன் யூதாவின் அரணான பட்டணங்களைப் கைப்பற்றி எருசலேம் வரைக்கும் வந்தான்.
அப்பொழுது இறைவாக்கினன் செமாயா, சீஷாக்கிற்குப் பயந்து எருசலேமில் ஒன்றுகூடியிருந்த ரெகொபெயாமிடத்திற்கும், யூதாவின் தலைவர்களிடத்திற்கும் வந்தான். அவன் அவர்களிடம், “யெகோவா சொல்வது இதுவே, ‘நீங்கள் என்னைக் கைவிட்டீர்கள்; அதனால், நானும் இப்பொழுது சீஷாக்கின் கையிலே உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்’ என்கிறார்” என்றான்.
இஸ்ரயேலின் தலைவர்களும் அரசனும் தங்களைத் தாழ்த்தி, “யெகோவா நீதியுள்ளவர்” என்று சொன்னார்கள்.
அவர்கள் தங்களைத் தாழ்த்தியதை யெகோவா கண்டபோது, யெகோவாவின் இந்த வார்த்தை செமாயாவுக்கு வந்தது: “அவர்கள் தங்களைத் தாழ்த்தியிருப்பதனால் நான் அவர்களை அழிக்கமாட்டேன்; நான் விரைவில் அவர்களை விடுவிப்பேன். சீஷாக்கின் மூலம் எனது கோபத்தை எருசலேமின்மேல் ஊற்றமாட்டேன். எப்படியாயினும் அவர்கள் அவனுக்கு கீழ்ப்பட்டு இருப்பார்கள், அதனால் அவர்கள் எனக்குப் பணிசெய்வதற்கும், மற்ற நாட்டு அரசர்களுக்கு பணிசெய்வதற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்வார்கள்.”
எகிப்தின் அரசன் சீஷாக் எருசலேமைத் தாக்கியபோது, அவன் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனையிலும் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடிக் கொண்டுபோனான். சாலொமோன் செய்துவைத்திருந்த எல்லா தங்கக் கேடயங்கள் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். 10 எனவே அரசன் ரெகொபெயாம் அவற்றிற்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து, அரச அரண்மனை வாசல் காவலர்களின் தளபதிகளிடம் ஒப்படைத்தான். 11 யெகோவாவின் ஆலயத்திற்கு அரசன் போகும்போதெல்லாம், அந்தக் காவலர் கேடயங்களை எடுத்துக்கொண்டு அரசனோடு போய், திரும்பவும் அவற்றைக் காவலறைக்குள் கொண்டுவந்து வைப்பார்கள்.
12 ரெகொபெயாம் தன்னை தாழ்த்தியபடியால், அவனை முழுவதும் அழிக்காதபடி, யெகோவாவின் கோபம் அவனைவிட்டுத் திரும்பியது; யூதாவில் இன்னும் சில நற்செயல்கள் காணப்பட்டது.
13 அரசன் ரெகொபெயாம் தன்னை எருசலேமில் உறுதியாய் நிலைப்படுத்தித் தொடர்ந்து அரசனாயிருந்தான். அவன் அரசனாகும்போது அவனுக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தது. யெகோவா தனது பெயர் விளங்கும்படி இஸ்ரயேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து தெரிந்துகொண்ட பட்டணமான எருசலேமில் பதினேழு வருடங்கள் அரசாண்டான். அம்மோனியப் பெண்ணான அவன் தாயின் பெயர் நாமாள். 14 யெகோவாவைத் தேடுவதற்கு அவன் தன் இருதயத்தில் உறுதியாய் இராதபடியினால் தீமையையே செய்தான்.
15 ரெகொபெயாமின் ஆட்சிக் காலத்தின் தொடக்கமுதல் முடிவு வரையான நிகழ்வுகள், இறைவாக்கினனான செமாயாவின் குறிப்புப் புத்தகத்திலும், தரிசனக்காரனான இத்தோவியரின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலும் அல்லவோ எழுதியிருக்கின்றன. ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் இடையில் தொடர்ந்து யுத்தம் நடந்து கொண்டேயிருந்தது. 16 ரெகொபெயாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் அபியா அவனுடைய இடத்தில் அரசனானான்.
* 12:3 12:3 கூஷியர் அல்லது எத்தியோப்பியர்