17
யூதாவின் அரசன் யோசபாத்
1 ஆசாவின் மகன் யோசபாத் அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அரசனாகி இஸ்ரயேலுக்கு எதிராகத் தன்னை பலப்படுத்திக் கொண்டான்.
2 அவன் யூதாவிலுள்ள எல்லா அரணான பட்டணங்களிலும் இராணுவவீரர்களை நிறுத்தினான். அத்துடன் அவன் யூதாவிலும், தன் தகப்பன் ஆசா கைப்பற்றியிருந்த எப்பிராயீம் பட்டணங்களிலும் காவற் படையையும் வைத்தான்.
3 யெகோவா யோசபாத்துடன்கூட இருந்தார். ஏனெனில் அவனுடைய ஆட்சியின் ஆரம்ப வருடங்களில் தனது தகப்பன் தாவீது பின்பற்றிய வழிகளில் அவன் நடந்தான். பாகால்களிடம் ஆலோசனை கேட்கவில்லை.
4 அவன் தன் முற்பிதாக்களின் இறைவனைத் தேடி, இஸ்ரயேலின் பழக்கங்களைவிட அவரது கட்டளைகளையே பின்பற்றினான்.
5 யெகோவா அரசாட்சியை அவனுடைய கட்டுப்பாட்டின்கீழ் நிலைநிறுத்தினார். யூதா மக்கள் எல்லோரும் யோசபாத்துக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அதனால் அவன் மிகுந்த செல்வமும், கனமும் பெற்றான்.
6 அவனுடைய இருதயம் யெகோவாவினுடைய வழிகளைப் பின்பற்ற உறுதிகொண்டது. மேலும் அவன் யூதாவிலிருந்து வழிபாட்டு மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும் அகற்றிப்போட்டான்.
7 அவனுடைய ஆட்சியின் மூன்றாம் வருடத்தில், யூதாவின் பட்டணங்களில் உள்ளவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு பென்னாயில், ஒபதியா, சகரியா, நெதனெயேல், மிகாயா ஆகிய தனது அதிகாரிகளை அனுப்பினான்.
8 அவர்களுடன் செமாயா, நெதானியா, செபதியா, ஆசகேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா ஆகிய சில லேவியர்களும், ஆசாரியர்களான எலீஷாமாவும், யெகோராமும் இருந்தார்கள்.
9 அவர்கள் யெகோவாவின் சட்டப் புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய் யூதா முழுவதும் படிப்பித்தார்கள். அவர்கள் யூதாவின் பட்டணங்கள் எல்லாவற்றிற்கும் போய் அங்குள்ள மக்களுக்குப் படிப்பித்தார்கள்.
10 யெகோவாவைப்பற்றிய பயம் யூதாவைச் சுற்றிலுமிருந்த நாடுகளின் எல்லா அரசுகளின் மேலும் வந்தது. அதனால் அவர்கள் யோசபாத்துடன் யுத்தம் செய்யவில்லை.
11 சில பெலிஸ்தியர் யோசபாத்திற்கு அன்பளிப்புகளையும், திறையாக வெள்ளியையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் அரபியரும் அவனுக்கு 7,700 செம்மறியாட்டுக் கடாக்களும், 7,700 வெள்ளாட்டுக் கடாக்களும் அடங்கிய மந்தைகளையும் கொண்டுவந்தார்கள்.
12 யோசபாத் மேலும் மேலும் வல்லமையுடையவனானான். அவன் யூதாவில் கோட்டைகளையும், களஞ்சியப் பட்டணங்களையும் கட்டினான்.
13 யூதாவின் பட்டணங்களில் ஏராளமாய் பொருட்கள் இருந்தன. அவன் எருசலேமில் அனுபவமிக்க இராணுவவீரரையும் வைத்திருந்தான்.
14 இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட குடும்பங்களின்படியான அவர்களுடைய விபரமாவது:
யூதாவைச் சேர்ந்த ஆயிரம் பேர்களைக் கொண்ட பிரிவுகளுக்கான தளபதிகள்:
அத்னா 3,00,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்;
15 அடுத்ததாக யோகனான் 2,80,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்;
16 அடுத்ததாக சிக்ரியின் மகன் அமசியா 2,00,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான். இவன் யெகோவாவுக்குப் பணிசெய்வதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான்;
17 பென்யமீனியரைச் சேர்ந்த எலியாதா,
வில்லுகளும் கேடயங்களும் ஏந்திய 2,00,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான். இவன் தைரியமுள்ள வீரன்.
18 அடுத்ததாக யெகோசபாத் யுத்த ஆயுதம் தரித்த 1,80,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்.
19 யூதா முழுவதிலுமுள்ள அரணான பட்டணங்களில் அவன் நிறுத்தியிருந்த போர் வீரர்களைத் தவிர, அரசனின் இராணுவ பணியில் ஈடுபட்ட மனிதர் இவர்களே.