26
யூதாவின் அரசன் உசியா
1 அதன்பின் யூதாவின் மக்கள் எல்லோரும் அமத்சியாவின் மகனான பதினாறு வயதுடைய உசியாவைக் கொண்டுவந்து அவன் தகப்பனின் இடத்தில் அரசனாக்கினார்கள்.
2 அரசன் அமத்சியா தனது முற்பிதாக்களைப்போல இறந்தபின், உசியா ஏலாத்தைத் திரும்பவும் கட்டி, அதை யூதாவுடன் சேர்த்துக்கொண்டான்.
3 உசியா அவனுடைய பதினாறாவது வயதில் அரசனானான். அவன் எருசலேமில் ஐம்பத்திரண்டு வருடங்கள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்; அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.
4 அவன் தனது தகப்பன் அமத்சியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான்.
5 இறைபயத்தில் தன்னைப் பயிற்றுவித்த சகரியாவின் நாட்களில் உசியா இறைவனைத் தேடினான். அவன் யெகோவாவைத் தேடிய காலமெல்லாம் இறைவன் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
6 அவன் பெலிஸ்தியருக்கு எதிராக யுத்தம்செய்யப் போய் காத், அஸ்தோத், யப்னே ஆகிய பட்டணங்களின் மதில்களை உடைத்துப்போட்டான். அதன்பின்பு அவன் அஸ்தோத்தின் அருகிலும், பெலிஸ்தியருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
7 இறைவன் பெலிஸ்தியர், கூர்பாகாலிலே வாழ்ந்த அரபியர், மெயூனியர் ஆகியோருக்கு எதிராக அவனுக்கு உதவி செய்தார்.
8 அம்மோனியர் உசியாவுக்கு வரி கொண்டுவந்தார்கள். அவனுடைய புகழ் எகிப்தின் எல்லைவரை பரவியிருந்தது. ஏனெனில் அவன் மிகவும் பலம்பொருந்திவனாய் இருந்தான்.
9 உசியா எருசலேமில் மூலைவாசல் அருகிலும், பள்ளத்தாக்கின் வாசல் அருகிலும், மதில்களின் மூலையிலும் கோபுரங்களைக் கட்டி பலப்படுத்தினான்.
10 அவன் பாலைவனத்திலும் கோபுரங்களைக் கட்டி, அநேகம் கிணறுகளையும் தோண்டினான். ஏனெனில் அவனிடம் மலையடிவாரத்திலும், சமவெளியிலும் அநேகம் வளர்ப்பு மிருகங்கள் இருந்தன. அவனிடம் அவனுடைய வயல்களிலும், குன்றுகளிலுள்ள திராட்சைத் தோட்டங்களிலும், வளமான நிலங்களிலும் வேலைசெய்வதற்கு மனிதர் இருந்தார்கள். ஏனெனில் அவன் விவசாயத்தை விரும்பினான்.
11 பிரிவு பிரிவாக யுத்தத்திற்குப் போக திறமையாகப் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவம் உசியாவிடம் இருந்தது. எண்ணிக்கையின்படியே அவர்கள் அரச அதிகாரிகளில் ஒருவனான அனனியாவின் தலைமையின்கீழ் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். செயலாளராகிய ஏயேலினாலும், அதிகாரி மாசெயாவினாலும் இவர்கள் ஒன்றுதிரட்டப்பட்டார்கள்.
12 இந்த இராணுவவீரர்களுக்குத் தலைமைவகித்த குடும்பத் தலைவர்களின் மொத்தத்தொகை 2,600 ஆகும்.
13 அவர்களின் தலைமையின்கீழ் 3,07,500 மனிதர் யுத்தத்திற்காக பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். அரசனுக்கு உதவிசெய்யவும், அவனுடைய பகைவர்களை எதிர்க்கவும் வல்லமையுள்ள படையாக இது இருந்தது.
14 உசியா கேடயங்கள், ஈட்டிகள், தலைக்கவசங்கள், வில்லுகள், கவண்கற்கள் என்பவற்றை முழு இராணுவத்திற்கும் கொடுத்திருந்தான்.
15 அம்புகளை எய்யவும், பெரிய கற்களை வீசி எறியவும், எருசலேமில் கோபுரங்களிலிருந்தும் மூலைப் பாதுகாப்பு அரண்களிலிருந்தும் உபயோகிப்பதற்கு திறமையான மனிதர்களினால் இயந்திரங்களைச் செய்திருந்தான். அவனுடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. ஏனெனில் இறைவன் அவன் பலமுள்ளவனாகும்வரை உதவினார்.
16 ஆனால் உசியா பலமுடையவனான பின்பு, அவனுடைய அகந்தை அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் தன் இறைவனாகிய யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருந்து தூபபீடத்தில் தூபங்காட்டும்படி ஆலயத்திற்குள் நுழைந்தான்.
17 ஆசாரியன் அசரியாவும், தைரியமான இன்னும் எண்பது யெகோவாவின் ஆசாரியரும் அவனைத் தொடர்ந்து உள்ளே போனார்கள்.
18 அவர்கள் அரசனுக்கு எதிர்முகமாகப் போய் நின்று, “உசியாவே, யெகோவாவுக்கு நறுமண தூபங்காட்டுவதற்கு உமக்குத் தகுதியில்லை. அது தூபங்காட்டுவதற்கென பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் சந்ததிகளான ஆசாரியருக்குரியது. பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறும். நீர் பாவம் செய்தீர். நீர் இறைவனாகிய யெகோவாவினால் கனப்படுத்தப்படமாட்டீர்” என்று சொன்னார்கள்.
19 தூபங்காட்டும்படி, தூப கலசத்தைக் கையில் வைத்திருந்த உசியா கோபங்கொண்டான். அவன் யெகோவாவின் ஆலயத்தில் தூபபீடத்திற்கு முன்பாக ஆசாரியருக்குமுன் கடுங்கோபத்துடன் நிற்கும்போதே அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி தோன்றியது.
20 பிரதான ஆசாரியன் அசரியாவும் மற்ற ஆசாரியரும் அவனைப் பார்த்தபோது, அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி இருப்பதைக் கண்டார்கள். எனவே அவர்கள் விரைவாக அவனை வெளியேற்றினார்கள். உண்மையாகவே யெகோவா தன்னைத் துன்புறுத்தியபடியால் அவனும் உடனே வெளியேறினான்.
21 உசியா அரசன் தான் சாகும் நாள்வரை குஷ்டவியாதி உடையவனாகவே இருந்தான். அவன் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டவனாக குஷ்டவியாதியுடன் ஒரு புறம்பான வீட்டில் வாழ்ந்தான். அவனுடைய மகன் யோதாம் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்து நாட்டு மக்களை ஆளுகை செய்தான்.
22 உசியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்ச்சிகள், தொடக்கமுதல் முடிவுவரை இறைவாக்கினன் ஆமோஸின் மகன் ஏசாயாவினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
23 உசியா தன் முற்பிதாக்களைப்போல இறந்தபின்பு, அரசர்களுக்குச் சொந்தமான அடக்க நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஏனெனில் அவன், “குஷ்டவியாதி உடையவனாயிருந்தான்” என மக்கள் சொன்னார்கள். அவனுடைய மகன் யோதாம் அவனுடைய இடத்தில் அரசனானான்.