20
ஆயிரம் வருட ஆட்சி
1 பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான்.
2 அவன் அந்த பூர்வகாலத்துப் பாம்பாகிய இராட்சதப் பாம்பைத் துரத்திப் பிடித்து, ஆயிரம் வருடங்களுக்குக் கட்டி வைத்தான். இந்த இராட்சதப் பாம்பே பிசாசு என்றும், சாத்தான் என்றும் அழைக்கப்பட்டது.
3 அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும்.
4 நான் நியாயத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள் அமர்ந்திருந்த, அரியணைகளைக் கண்டேன். பின்பு நான், இயேசுவுக்காக சாட்சி கொடுத்ததற்காகவும், இறைவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டதற்காகவும், தலைவெட்டுண்டு இறந்தவர்களின் ஆத்துமாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த மிருகத்தையோ, அவனுடைய உருவச்சிலையையோ வணங்கவில்லை. அவனுடைய அடையாளத்தைத் தங்கள் நெற்றியிலோ, அல்லது தங்கள் கைகளிலோ அவர்கள் பெற்றுக்கொள்ளவும் இல்லை. அவர்கள் உயிர்பெற்றவர்களாய் எழும்பி, கிறிஸ்துவுடனே ஆயிரம் வருடங்கள் ஆட்சிசெய்தார்கள்.
5 இறந்துபோன மற்றவர்கள், அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்வரை, உயிர்பெற்று எழுந்திருக்கவில்லை. இதுவே முதலாவது உயிர்த்தெழுதல்.
6 முதலாவது உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள். இரண்டாம் மரணத்திற்கு, அவர்கள்மேல் வல்லமை இல்லை. அவர்கள் இறைவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய ஆசாரியராயிருந்து, கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருடங்கள் ஆட்சிசெய்வார்கள்.
சாத்தானின் தோல்வி
7 அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது, சாத்தான் தன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான்.
8 அவன் பூமியின் நான்கு பக்கங்களிலும் இருக்கின்ற, மக்களை ஏமாற்றும்படி போய், அவர்களையும், கோகு, மாகோகு என்பவர்களையும் யுத்தத்திற்காகக் கூட்டிச் சேர்ப்பான். அவர்கள் எண்ணிக்கையில் கடற்கரை மணலைப்போல் இருப்பதை நான் கண்டேன்.
9 அவர்கள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் கடந்து, அணிவகுத்து வந்து, இறைவனுடைய மக்களின் முகாமையும், இறைவன் அன்பாயிருக்கின்ற நகரத்தையும் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால் வானத்திலிருந்து நெருப்பு வந்து, அவர்களைச் சுட்டெரித்துப்போட்டது.
10 அவர்களை ஏமாற்றிய பிசாசு, கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலிலே தள்ளி எறியப்பட்டான். அந்த நெருப்புக் கடலிலேதான் அந்த மிருகமும் அந்தப் பொய் தீர்க்கதரிசியும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரவும் பகலுமாக என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள்.
இறுதி நியாயத்தீர்ப்பு
11 பின்பு நான், பெரிய வெண்மையான அரியணையொன்றைக் கண்டேன். அதில் அமர்ந்திருக்கிறவரையும் நான் கண்டேன். பூமியும் வானமும் அவர் முன்னிலையிலிருந்து விலகி ஓடின. அவற்றிற்கு இடம் ஒன்றும் இருக்கவில்லை.
12 பின்பு நான், இறந்தவர்களைக் கண்டேன். அவர்கள் பெரியோரும், சிறியோருமாய் அந்த அரியணைக்கு முன்பாக நின்றார்கள். புத்தகங்கள் திறக்கப்பட்டன. இன்னொரு புத்தகமும் திறக்கப்பட்டது. இது ஜீவப் புத்தகம். அந்த புத்தகங்களிலே எழுதப்பட்டிருந்தபடி, அவர்கள் செய்தவைகளுக்காக ஏற்ற நியாயத்தீர்ப்பு இறந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
13 கடலில் இறந்தவர்களை கடல் ஒப்புக்கொடுத்தது. மரணமும், பாதாளமும் அவைகளுக்குள் கிடந்தவர்களை ஒப்புக்கொடுத்தன. ஒவ்வொருவனுக்கும், அவன் செய்ததற்கு ஏற்றதாகவே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது.
14 பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம்.
15 ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான்.