4
பரலோகத்தில் அரியணை
இதற்குப்பின் நான் பார்த்தபோது, எனக்கு முன்பாக பரலோகத்திலே ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட எக்காளத்தைப்போல் தொனித்த அந்தக் குரல் என்னுடனே பேசுவதைக் கேட்டேன், “இங்கே, மேலே வா. இதற்குப்பின் நிகழப்போவதை, நான் உனக்குக் காண்பிப்பேன்” என்றது. உடனே நான் ஆவிக்குள்ளானேன். அங்கே எனக்கு முன்பாக பரலோகத்தில், ஒரு அரியணை இருந்ததைக் கண்டேன். அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். அதில் அமர்ந்திருப்பவருடைய தோற்றம் படிகக்கல்லைப்போலும், மாணிக்கக்கல்லைப்போலும் இருந்தார். அரியணையைச் சுற்றி, மரகதத்தைப்போல் ஒரு வானவில் பிரகாசித்தது. அந்த அரியணையைச் சுற்றி இன்னும் இருபத்து நான்கு அரியணைகள் இருந்தன. அவைகளின்மேல், இருபத்து நான்கு சபைத்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் வெள்ளை உடைகளை உடுத்தியிருந்தார்கள். அவர்கள் தங்கள் தலைகளிலே தங்க கிரீடங்களை அணிந்திருந்தார்கள். அரியணையிலிருந்து மின்னல்களும், பேரிரைச்சல்களும், முழக்கத்தின் சத்தங்களும் வந்துகொண்டிருந்தன. அரியணைக்கு முன்பாக, ஏழு தீபங்கள் எரிந்துகொண்டிருந்தன. இவைகளே, இறைவனுடைய ஏழு ஆவிகள். அத்துடன், அரியணைக்கு முன்பாகக் பளிங்கைப்போல் தெளிவாய் இருந்த கண்ணாடிக்கடல் ஒன்று இருந்தது.
நடுவிலே அரியணையைச் சுற்றி, நான்கு உயிரினங்கள் இருந்தன. அவைகள் முன்னும் பின்னும் கண்களால் மூடப்பட்டிருந்தன. முதலாவது, சிங்கத்தைப்போல் காணப்பட்டது. இரண்டாவது, எருதைப்போல் காணப்பட்டது. மூன்றாவது, மனிதனைப் போன்ற முகம் உடையதாய் இருந்தது. நான்காவது, பறக்கின்ற கழுகைப்போலவும் அந்த உயிரினங்கள் இருந்தன. இந்த நான்கு உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும், ஆறாறு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு உயிரினங்களின் எல்லா இடங்களும், கண்களால் மூடப்பட்டிருந்தன. அவைகளின் சிறகுகளின் கீழேயும்கூட, கண்கள் இருந்தன. இரவும் பகலும் இடைவிடாமல் அவைகள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தன:
“ ‘எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தர்
பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,’*
இவரே இருந்தவரும், இருக்கிறவரும், வரப்போகிறவருமானவர்.”
அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், 10 இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கிறவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் அரியணைக்கு முன் தங்கள் கிரீடங்களை வைத்துவிட்டு:
11 “எங்கள் இறைவனாகிய கர்த்தாவே,
மகிமையையும் கனத்தையும்
வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்கு நீர் தகுதியுள்ளவரே.
ஏனெனில், நீரே எல்லாவற்றையும் படைத்தீர்.
உம்முடைய சித்தத்தினாலேயே, அவைகள் எல்லாம் படைக்கப்பட்டு உயிர் வாழ்கின்றன”
என்று பாடினார்கள்.
* 4:8 4:8 ஏசா. 6:3