8
ஏழாவது முத்திரையும் தூபக்கிண்ணமும்
ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையைத் திறந்தபோது, பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதி நிலவியது.
இறைவனுக்கு முன்பாக நிற்கும், ஏழு இறைத்தூதர்களை நான் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
இன்னொரு இறைத்தூதன் வந்து, பலிபீடத்தின் அருகே நின்றான். அவன் ஒரு தங்க தூபக்கிண்ணத்தை வைத்திருந்தான். அரியணைக்கு முன்பாக இருக்கின்ற தங்கப் பலிபீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய மன்றாட்டுகளுடனும் சேர்த்து தூபங்காட்டும்படி அவனுக்குப் பெருமளவு நறுமணத்தூள் கொடுக்கப்பட்டது. அந்தத் தூதனுடைய கையிலிருந்து தூபத்தின் புகை எழுந்து, பரிசுத்தவான்களுடைய மன்றாட்டுகளுடன் கலந்து, இறைவனுக்கு முன்பாக மேல்நோக்கிச் சென்றது. பின்பு அந்தத் தூதன் தூபக்கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்திலிருந்த நெருப்பினால் அதை நிரப்பினான். அவன் அந்த நெருப்பைப் பூமியின்மேல் வீசி எறிந்தான். அப்பொழுது இடிமுழக்கத்தின் சத்தங்களும், பேரிரைச்சல்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன.
எக்காளங்கள்
பின்பு ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு இறைத்தூதர்களும், அவற்றை ஊதுவதற்கு ஆயத்தமானார்கள்.
முதலாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது கல்மழையும், இரத்தம் கலந்திருந்த நெருப்பும் வந்தன. அது பூமியின்மேல் வீசியெறியப்பட்டது. பூமியின் மூன்றில் ஒரு பங்கு எரிந்துபோயிற்று, மரங்களில் மூன்றில் ஒரு பங்கும் எரிந்துபோயின, பச்சையான புல் எல்லாமே எரிந்துபோயிற்று.
இரண்டாவது இறைத்தூதன், தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது பிரமாண்டமான மலைபோல ஒன்று, தீப்பற்றி எரிகிறதாய் கடலில் எறியப்பட்டது. கடலில் மூன்றிலொரு பங்கு இரத்தமாக மாறியது. கடலிலுள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இறந்துபோயின; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கும் அழிந்துபோயின.
10 மூன்றாவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம், ஒரு தீப்பந்தத்தைப்போல் எரிந்து வானத்திலிருந்து விழுந்தது. அது ஆறுகளின் மூன்றில் ஒரு பங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது. 11 அந்த நட்சத்திரத்தின் பெயர் கசப்பு என்பதாகும்; தண்ணீரின் மூன்றிலொரு பங்கு கசப்பாக மாறியது. கசப்பாக மாறிய அந்தத் தண்ணீரினால், மனிதர்களில் பலர் இறந்தார்கள்.
12 நான்காவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்படைந்தது. சந்திரனில் மூன்றில் ஒரு பங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கும் பாதிப்படைந்தன. இதனால், அவைகளில் மூன்றில் ஒரு பங்கும் இருளடைந்தன. பகலின் மூன்றிலொரு பங்கும், இரவின் மூன்றிலொரு பங்கும் வெளிச்சம் இல்லாமல் போயின.
13 பின்பு நான் பார்த்தபொழுது, நடுவானத்திலே பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு, உரத்த சத்தமிடக்கேட்டேன்: “ஐயோ! ஐயோ! பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு, மற்ற மூன்று இறைத்தூதர்களினாலும் ஊதப்படப்போகிற எக்காள சத்தங்களினால், ஐயோ, கேடு வரப்போகிறதே!” என்றது.