5
பறக்கும் புத்தகச்சுருள்
1 மீண்டும் நான் பார்த்தபோது, அங்கே பறக்கும் புத்தகச்சுருள் ஒன்றைக் கண்டேன்.
2 அந்தத் தூதன் என்னிடம், “நீ என்ன காண்கிறாய்?” என்று கேட்டான்.
நான், “பறக்கும் புத்தகச்சுருள் ஒன்றைக் காண்கிறேன், அது முப்பது அடி நீளமும், பதினைந்து அடி அகலமுமாயிருக்கிறது என்றேன்.”
3 அப்பொழுது அவன் என்னிடம், “நாடெங்கும் பரவுகிற சாபமே அது; அதன் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, திருடுகிற ஒவ்வொருவனும் நாட்டைவிட்டுத் துரத்தப்படுவான். மறுபக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, பொய் ஆணையிடுகிற ஒவ்வொருவனும் நாட்டைவிட்டுத் துரத்தப்படுவான்.
4 சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘நான் இந்த சாபத்தை வெளியே அனுப்புவேன், அப்பொழுது அது திருடன் வீட்டிலும், என் பெயரில் பொய் ஆணையிடுகிறவன் வீட்டிலும் நுழையும். அது அவன் வீட்டில் தங்கியிருந்து, அந்த வீட்டை அழிக்கும். அதன் மரவேலைப்பாடுகளும் கற்களுங்கூட முற்றிலும் அழிந்துவிடும் என்றான்.’ ”
கூடைக்குள் பெண்
5 பின்பு என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன் என்னிடம் வந்து, “அங்கே தோன்றுவது என்ன என்று நீ நோக்கிப்பார் என்றான்.”
6 “அது என்ன?” என்று நான் அந்தத் தூதனைக் கேட்டேன்.
அதற்கு அவன், “அது அளக்கும் ஒரு கூடை” என்றான். மேலும் அவன், “நாடெங்கும் உள்ள மக்களின் அக்கிரமமே இது” என்றும் சொன்னான்.
7 அதற்குப் பின்பு அதன் ஈயமூடி திறக்கப்பட்டது. அந்த கூடைக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
8 அப்பொழுது அவன், “இவளே அந்த அக்கிரமம்” எனக்கூறி, அவளைத் திரும்பவும் கூடைக்குள் தள்ளி, அதன் வாயை ஈயமூடியால் அடைத்தான்.
9 அதன்பின் நான் மேலே பார்த்தேன். அங்கே எனக்குமுன் இரண்டு பெண்கள் தங்கள் சிறகுகளை விரித்துக் காற்றுடன் வருவதைக் கண்டேன். நாரையின் சிறகுகளைப்போன்ற சிறகுகள் அவர்களுக்கு இருந்தன; அவர்கள் அந்த கூடையை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் உயரத் தூக்கினார்கள்.
10 “கூடையை எங்கே அவர்கள் தூக்கிக்கொண்டு போகிறார்கள்?” என்று என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம் நான் கேட்டேன்.
11 அதற்கு அவன், “சிநெயார் நாட்டில் அதற்கு ஒரு கோயில் கட்டப்போகிறார்கள். அது கட்டப்பட்டதும், கூடை அதற்குரிய இடத்தில் வைக்கப்படும் என்றான்.”