௩௮
எசேக்கியாவின் சுகவீனம்
௧ அந்த நேரத்தில், எசேக்கியா சுகவீனம்அடைந்தான். அவன் மரணத்துக்கு சமீபமாயிருந்தான். ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசி அவனைப் பார்க்க வந்தான்.
ஏசாயா அரசனிடம், “இவற்றை உன்னிடம் சொல்லுமாறு கர்த்தர் கூறினார்: நீ விரைவில் மரிப்பாய். எனவே, நீ மரித்தபிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உனது குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். நீ மீண்டும் குணமடையமாட்டாய்!” என்று கூறினான்.
௨ எசேக்கியா ஆலயத்தின் சுவரின் பக்கம் திரும்பி ஜெபம் செய்யத் தொடங்கினான்.
௩ “கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உண்மையாக உமக்குச் சேவை செய்ததை நினைத்தருளும். நீர் நல்லது என்று கூறியவற்றையே நான் செய்திருக்கிறேன்” என்று அவன் சொன்னான். பிறகு எசேக்கியா மிக உரத்த குரலில் கதறத் தொடங்கினான்.
௪ ஏசாயா கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றான்.
௫ ஏசாயா, “எசேக்கியாவிடம் போய் உனது முற்பிதாவான தாவீதின் தேவனாகிய கர்த்தர் சொன்னவை இதுதான் என்று அவனிடம் கூறு. உனது ஜெபத்தை நான் கேட்டேன். உனது கண்ணீரை நான் பார்த்தேன். நான் உனது வாழ்க்கையில் 15 ஆண்டுகளைக் கூட்டுவேன்.
௬ நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா அரசனிடமிருந்து காப்பாற்றுவேன் நான் இந்த நகரத்தை பாதுகாப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார் என்றான்.
௭ அவர் இவற்றையெல்லாம் செய்வார் என்பதைக் காண்பிக்கும்படி கர்த்தரிடமிருந்து வந்த அடையாளம் இதுதான்.
௮ “பார், ஆகாசு சூரிய கடியாரத்தில் படிக்குப்படி இறங்கின சூரிய நிழலை பத்துப் படிகள் பின்னிட்டுத் திருப்புகிறேன். முன்பு இருந்த இடத்திலிருந்து சூரிய நிழல் பத்துப்பாகை பின்னால் போகும்” என்றான்.
Hezekiah’s Song
௯ எசேக்கியா நோயிலிருந்து குணமடைந்ததும் அவனிடமிருந்து வந்த கடிதம் இதுதான்.
௧௦ நான் முதுமையடையும்வரை வாழ்வேன் என்று நான் எனக்குள் சொன்னேன்.
ஆனால் பிறகு பாதாளத்தின் வாசல்கள் வழியாகச் செல்லும் எனது நேரம் வந்தது.
௧௧ எனவே, நான் சொன்னேன்: “கர்த்தரை நான் இனிமேல் உயிரோடு இருக்கிறவர்களின் நாட்டில் பார்க்கமாட்டேன்.
இனிமேல் பூமியிலுள்ள ஜனங்களோடு இருந்து ஜனங்களை நான் காணமாட்டேன்.
௧௨ எனது வீடு, எனது மேய்ப்பனுடைய கூடாரம் கீழே தள்ளப்படுவதுபோல் என்னிடமிருந்து எடுக்கப்படும்.
நெசவு செய்கிறவன் பாவினை அறுப்பது போல் நான் முடிந்து போகிறேன்.
எனது வாழ்வை அவ்வளவு சிறிய காலத்திற்குள் நீ முடித்தாய்!
௧௩ ஒரு சிங்கத்தைப் போன்ற நான் எல்லா இரவுகளிலும் கதறினேன்.
ஆனால் எனது நம்பிக்கைகள் சிங்கம் எலும்புகளைத் தின்பது போன்று நொறுக்கப்பட்டன.
இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எனது வாழ்வை நீ முடித்துவிட்டாய்.
௧௪ ஒரு புறாவைப்போன்று அலறினேன்.
ஒரு பறவையைப்போன்று அலறினேன்.
எனது கண்கள் சோர்ந்துபோயின.
ஆனால் நான் தொடர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எனது ஆண்டவரே! நான் அதிகமாய் ஒடுங்கிப் போகிறேன்.
எனக்கு உதவிட வாக்களிப்பீர்!”
௧௫ நான் என்ன சொல்லமுடியும்.
என்ன நிகழும் என்று எனது ஆண்டவர் கூறினார்.
அவை நிகழ எனது எஜமானர் காரணமாக இருப்பார்.
இந்தத் தொல்லைகளை நான் எனது ஆத்துமாவிற்குள் வைத்திருந்தேன்.
எனவே இப்போது நான் எனது வாழ்வுமுழுவதும் பணிவுள்ளவனாக இருப்பேன்.
௧௬ எனது ஆண்டவரே! இந்தக் கடின நேரத்தைப் பயன்படுத்தி எனது ஆவியை மீண்டும் வாழச் செய்யும்.
என் ஆவி பலமும் நலமும் பெற உதவும்.
நான் நலம் பெற உதவும்!
நான் மீண்டும் வாழ உதவும்!
௧௭ பார்! எனது தொல்லைகள் போகின்றன!
இப்போது எனக்கு சமாதானம் உள்ளது.
நீர் என்னை மிகவும் நேசிக்கிறீர்.
நான் கல்லறையில் அழுகும்படிவிடமாட்டீர்.
எனது பாவங்களையெல்லாம் மன்னித்தீர்,
எனது பாவங்களை வெகு தொலைவிற்கு எறிந்தீர்.
௧௮ மரித்த ஜனங்கள் உம்மைப் புகழ்ந்து பாடுவதில்லை.
பாதாளத்திலுள்ள ஜனங்களும் உம்மைத் துதிப்பதில்லை.
மரித்த ஜனங்கள் தமக்கு உதவுமாறு உம்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள்.
அவர்கள் தரையில் உள்ள பாதாளத்துக்குள் செல்கிறார்கள்.
அவர்கள் மீண்டும் பேசமாட்டார்கள்.
௧௯ இன்று என்னைப்போன்று உயிருடன் இருக்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கும் ஜனங்களாக உள்ளனர்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளிடம், “உம்மை நம்ப முடியும்” என்று சொல்லவேண்டும்.
௨௦ எனவே, நான் சொல்கிறேன்: “கர்த்தர் என்னைக் காப்பாற்றினார் எனவே நாங்கள் பாடுவோம்.
எங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் பாடல்களை இசைப்போம்”.
௨௧ பிறகு எசேக்கியாவிடம் ஏசாயா, “நீ அத்திப்பழங்களை பசையைபோன்று குழைத்து உனது புண்ணின்மேல் தடவவேண்டும். பிறகு நீ குணம் பெறுவாய்” என்றான்.
௨௨ ஆனால் எசேக்கியா ஏசாயாவிடம், “நான் குணமடைவேன் என்பதையும், நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போக இயலும் என்பதையும் நீரூபிக்கும் அடையாளம் எது?” என்று கேட்டிருந்தான்.