௩௯
பாபிலோனிலிருந்து தூதுவர்கள்
௧ அந்த நேரத்தில், பலாதானின் மகனான மெரோதாக் பலாதான் பாபிலோனின் அரசனாக இருந்தான். எசேக்கியாவிற்கு மெரோதாக் கடிதங்களையும், அன்பளிப்புகளையும் அனுப்பினான். எசேக்கியா நோயுற்றிருந்து குணம் பெற்றதை மெரோதாக் கேள்விப்பட்டே அன்பளிப்புகளை அனுப்பினான்.
௨ இந்த அன்பளிப்புகள் எசேக்கியாவை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது. எனவே, எசேக்கியா தனது பொக்கிஷ சாலையிலுள்ள விலையுயர்ந்தவற்றை மெரோதாக்கின் ஆட்கள் பார்வையிட அனுமதித்தான். அந்த ஆட்களிடம் எசேக்கியா தனது செல்வங்களான வெள்ளி, தங்கம், எண்ணெய்வளம், விலைமதிப்புள்ள வாசனைப் பொருட்கள் என அனைத்தையும் காட்டினான். பிறகு அவன் போருக்குப் பயன்படுத்தும் வாள்கள் மற்றும் கேடயங்களையும் காட்டினான். தான் பாதுகாத்து வைத்திருந்த அனைத்தையும் அவன் அவர்களுக்குக் காட்டினான். அவன் தனது வீட்டிலும், தனது நாட்டிலும் உள்ள எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான்.
௩ தீர்க்கதரிசியான ஏசாயா, அரசனான எசேக்கியாவிடம் சென்று, “இந்த ஆட்கள் என்ன சொல்கிறார்கள்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான்.
எசேக்கியா, “வெகு தொலைவிலுள்ள நாட்டிலிருந்து இவர்கள் வந்தார்கள். இவர்கள் பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று கூறினான்.
௪ எனவே ஏசாயா அவனிடம் கேட்டான், “உனது வீட்டில் இவர்கள் என்ன பார்த்தார்கள்?” என்று கேட்டான்.
எசேக்கியா, “இவர்கள் எனது அரண்மனையில் உள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள். நான் எனது செல்வம் முழுவதையும் காட்டினேன்” என்று கூறினான்.
௫ ஏசாயா எசேக்கியாவிடம், “சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளைக் கவனி.
௬ எதிர்காலத்தில், உன் அரண்மனையிலுள்ள அனைத்தும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்த உன்னிடமுள்ள அனைத்தும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும். எல்லா செல்வமும் வெளியே எடுக்கப்படும். எதுவும் விடுபடாது! சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதனைக் கூறினார்.
௭ பாபிலோனின் அரசன் உனது சொந்த மகன்களை எடுத்துச் செல்வான்! பாபிலோன் அரசனின் அரண்மனையில் உனது மகன்கள் வேலைக்காரர்களாக இருப்பார்கள்” என்றான்.
௮ எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தரிடமிருந்து வந்த செய்தி நன்றாக உள்ளது” என்று கூறினான். (எசேக்கியா இதனைச் சொன்னான். ஏனென்றால், அவன், “நான் அரசனாக இருக்கும்போது தொல்லைகள் இல்லாமல் சமாதானம் இருக்கும்” என்று எண்ணினான்).