௧௨
பெத்தானியாவில் இயேசு
(மத். 26:6–13; மாற். 14:3–9)
௧ பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே லாசரு வாழ்ந்து வந்தான். (இவன் இறந்த பின்னரும் இயேசுவால் உயிர் பெற்று எழுந்தவன்)
௨ பெத்தானியாவில் இயேசுவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்தனர். மார்த்தாள் உணவு பரிமாறினாள். இயேசுவோடு லாசருவும் இன்னும் பலரும் விருந்தில் கலந்துகொண்டனர்.
௩ மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது.
௪ யூதாஸ்காரியோத்தும் அங்கிருந்தான். (யூதாஸ் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன்தான் பிறகு இயேசுவிற்கு எதிரானவன்.) மரியாள் செய்தவற்றை இவன் விரும்பவில்லை.
௫ அவன் “இத்தைலம் முந்நூறு வெள்ளிகாசுகள் மதிப்பு உடையது. இதனை விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றான்.
௬ ஆனால் உண்மையில் அவனுக்கு ஏழைகளின்மீது அக்கறையில்லை. அவன் ஒரு திருடனானபடியால் இவ்வாறு சொன்னான். இவன்தான் இயேசுவின் சீஷர்களுள் பணப்பையை வைத்திருந்தவன். இவன் அவ்வப்போது பணப்பையிலிருந்து பணம் திருடி வந்தான்.
௭ இயேசு அவனிடம், “அவளைத் தடை செய்யாதீர்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதைச் சேமித்து வைத்திருந்தாள்.
௮ ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நானோ எப்பொழுதும் உங்களோடு இருப்பதில்லை” என்றார்.
லாசருவுக்கு எதிரான சதி
௯ யூதர்களில் பலர், இயேசு பெத்தானியாவில் இருப்பதாக அறிந்தனர். ஆகையால் அவர்கள் அங்கே சென்றனர். அவர்கள் இயேசுவை மட்டுமல்லாமல் லாசருவையும் பார்க்க எண்ணினர். லாசரு இயேசுவால் மரணத்துக்குப் பின்னும் உயிரோடு எழுப்பப்பட்டவன்.
௧௦ ஆகவே, தலைமை ஆசாரியர்களும் இயேசுவோடு லாசருவையும் கொல்லத் திட்டமிட்டார்கள்.
௧௧ ஏனென்றால் லாசருவின் நிமித்தம் ஏராளமான யூதர்கள் தங்கள் தலைவர்களை விட்டுவிட்டு இயேசுவை நம்பத் தொடங்கினர். அதனால்தான் யூதத் தலைவர்கள் லாசருவையும் கொலைசெய்ய விரும்பினர்.
எருசலேமில் இயேசு
(மத். 21:1–11; மாற். 11:1–11; லூ. 19:28–40)
௧௨ மறுநாள் இயேசு வருவதாக எருசலேமிலுள்ள பெருங்கூட்ட மக்கள் கேள்விப்பட்டனர். இம்மக்கள் பஸ்கா பண்டிகைக்காக வந்தவர்கள்.
௧௩ அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்:
“ ‘அவரைப் புகழ்வோம்! வருக!’
‘தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே!’ சங்கீதம் 118:25-26
“தேவன் இஸ்ரவேலின் இராஜாவை ஆசீர்வதிப்பாராக!”
என்று முழங்கினர்.
௧௪ இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார்.
௧௫ “சீயோன் நகரமே அஞ்சவேண்டாம். பார்.
உன் அரசர் வந்துகொண்டிருக்கிறார்.
அவர் இளங்கழுதைமேல் சவாரி செய்து வருகிறார்” சகரியா 9:9
என்றும் மக்கள் ஆரவாரம் செய்தனர்.
௧௬ இயேசுவின் சீஷர்கள் இவற்றை முதலில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இயேசு மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்கள் இவை ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறதே என்று உணர்ந்துகொண்டனர். அத்துடன் அவருக்காகத் தாங்கள் செய்த செய்கைகளையும் நினைவுகூர்ந்தனர்.
இயேசுவைப்பற்றி மக்கள் பேசுதல்
௧௭ மரணத்திலிருந்து லாசருவை இயேசு எழுப்பி “கல்லறையை விட்டு வெளியே வா” என்று சொன்னபோது இயேசுவுடன் பலர் இருந்தனர். இப்பொழுது அவர்கள் மற்றவர்களிடம் இயேசு செய்தவற்றைப்பற்றிக் கூறினர்.
௧௮ இயேசு இந்த அற்புதத்தைச் செய்ததைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயேசுவை வரவேற்பதற்காகத் திரண்டனர்.
௧௯ அதனால் பரிசேயர்கள் தங்களுக்குள், “பாருங்கள், நமது திட்டம் நன்மையைத் தரவில்லை. எல்லா மக்களும் அவரைப் பின்தொடர்கிறார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
ஜீவன்-மரணம்
௨௦ அங்கே கிரேக்க நாட்டு மக்களில் சிலரும் இருந்தனர். இவர்கள் பஸ்கா பண்டிகையில் வழிபாடு செய்ய எருசலேமுக்கு வந்திருந்தனர்.
௨௧ இவர்கள் பிலிப்புவிடம் சென்று (கலிலேயாவிலுள்ள பெத்சாய்தாவில் இருந்து வந்தவன் பிலிப்பு) “ஐயா, நாங்கள் இயேசுவைச் சந்திக்க விரும்புகிறோம்” என்றனர்.
௨௨ பிலிப்பு அந்திரேயாவிடம் சொன்னான். பிறகு இருவரும் இயேசுவிடம் சொன்னார்கள்.
௨௩ இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமை பெறுகிற நேரம் வந்துவிட்டது.
௨௪ நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும்.
௨௫ தனக்குச் சொந்தமான வாழ்வை நேசிக்கிறவன் அதனை இழப்பான். இவ்வுலகில் தன் வாழ்வின்மீது வெறுப்புகொண்டவன் என்றென்றைக்கும் அதைக் காத்துக்கொள்வான். அவன் நிரந்தர வாழ்வைப் பெறுவான்.
௨௬ எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார்.”
இயேசு தன் மரணத்தைப்பற்றிப் பேசியது
௨௭ “நான் இப்போது கலக்கத்தில் இருக்கிறேன். நான் என்ன சொல்வது? ‘பிதாவே, என்னை இந்தத் துன்ப காலத்தில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று சொல்லலாமா? இல்லை, துன்பப்படுவதற்காகவே இத்தருணத்தில் வந்தேன்.
௨௮ பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக!” என்றார்.
அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்றது.
௨௯ அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர்.
வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர்.
௩௦ மக்களிடம் இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல. உங்களுக்காக.
௩௧ உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டுகொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான்.
௩௨ நான் பூமியில் இருந்து உயர்த்தப்படுவேன். இது நடைபெறும்போது எல்லா மக்களையும் என்னோடு சேர்த்துக்கொள்வேன்” என்றார்.
௩௩ தான் எவ்வாறு இறந்துபோவேன் என்பதைக் காட்டவே இவ்வாறு கூறினார்.
௩௪ ஆனால் மக்களோ, “கிறிஸ்து என்றென்றும் வாழ்வார் என்று நமது சட்டங்கள் கூறுகின்றனவே. அப்படியிருக்க ‘மனித குமாரன் உயர்த்தப்படுவார்’ என்று ஏன் கூறுகின்றீர்? யார் இந்த ‘மனித குமாரன்?’ ” எனக் கேட்டனர்.
௩௫ பிறகு இயேசு, “இன்னும் சிறிது காலம் உங்களோடு ஒளி இருக்கும். எனவே, ஒளி இருக்கும்போதே நடந்துவிடுங்கள். அப்போதுதான் இருட்டாகிய பாவம் உங்களைப் பிடித்துக்கொள்ளாது. இருட்டிலே நடந்துபோகிறவனுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும்.
௩௬ ஆகவே, ஒளி இருக்கும்போதே அதன்மீது நம்பிக்கை வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஒளியின் பிள்ளைகள் ஆவீர்கள்” என்றார். இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின் அவ்விடத்தை விட்டுப் போனார். அவர் போய் அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக்கொண்டார்.
இயேசுவை நம்பாத யூதர்கள்
௩௭ இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
௩௮ தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.
“கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்?
தேவனின் வல்லமையைக் கண்டுகொண்டவர்கள் யார்?” ஏசாயா 53:1
௩௯ இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும்,
௪௦ “தேவன் மக்களைக் குருடாக்கினார்.
தேவன் அவர்களின் மனதை மூடினார்.
அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார்.
அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.” ஏசாயா 6:10
௪௧ இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார்.
௪௨ ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவை நம்பினார்கள். ஏராளமான யூதத்தலைவர்கள் கூட இயேசுவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை நம்புவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. தாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்கப்படுவோமோ என்று அவர்கள் பயந்தனர்.
௪௩ அவர்கள் தேவனால் வரும் பாராட்டைவிட மனிதரால் வரும் பாராட்டை விரும்பினர்.
தீர்ப்பளிக்கும் வசனங்கள்
௪௪ பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான்.
௪௫ என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான்.
௪௬ நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான்.
௪௭ “நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை.
௪௮ என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும்.
௪௯ ஏனென்றால் நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும்.
௫௦ என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார்.