௧௧
லாசருவின் இறப்பு
௧ லாசரு என்ற பெயருள்ள ஒரு மனிதன் நோயுற்றிருந்தான். அவன் பெத்தானியா என்ற நகரத்தில் வாழ்ந்து வந்தான். இந்நகரத்தில்தான் மரியாளும் அவளது சகோதரி மார்த்தாளும் வாழ்ந்தனர்.
௨ (இந்த மரியாள்தான் பின்பு இயேசுவிற்கு வாசனைத் தைலம் பூசித் தன் கூந்தலால் அவரது கால்களைத் துடைத்தவள்) மரியாளின் சகோதரன்தான் லாசரு. அவன் இப்போது நோயுற்றிருந்தான்.
௩ ஆகையால் மரியாளும் மார்த்தாளும் இயேசுவிடம் செய்தி அனுப்பி “ஆண்டவரே, உங்கள் அன்பான நண்பன் லாசரு நோயுற்றிருக்கிறான்” என்று சொன்னார்கள்.
௪ இயேசு இதனைக் கேட்டு “நோயின் முடிவு மரணம் அன்று. இந்த நோய் தேவனை மகிமைப்படுத்துவதற்காக ஏற்பட்டது. இது, தேவனின் குமாரனுக்குப் புகழைக் கொண்டுவருவதற்காகவே உண்டானது” என்றார்.
௫ (மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய மூவரையும் இயேசு நேசித்து வந்தார்)
௬ இயேசு லாசருவின் நோயைப்பற்றி அறிந்தபோது மேலும் இரண்டு நாட்கள் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே தங்கினார்.
௭ பிறகு இயேசு தன் சீஷர்களிடம் “நாம் மறுபடியும் யூதேயாவுக்குத் திரும்பிப் போவோம்” என்றார்.
௮ அவரது சீஷர்கள், “ஆண்டவரே, யூதேயாவில் உள்ள யூதர்கள் உம்மைக் கல்லெறிந்து கொல்ல முயற்சித்தார்கள். அது நடந்தது சமீபகாலத்தில்தான். எனவே, இப்பொழுது அங்கே திரும்பிப் போக வேண்டுமா?” என்று கேட்டனர்.
௯ இயேசுவோ, “பகலில் பன்னிரண்டு மணிநேரம் வெளிச்சம் இருக்கும். சரிதானே. ஒருவன் பகலில் நடந்தால், அவன் தடுமாறி விழமாட்டான். ஏனென்றால், அவனால் உலகின் வெளிச்சத்தைப் பார்க்க முடியும்.
௧௦ ஆனால் ஒருவன் இரவிலே நடந்தால் அவன் தடுமாறுவான். ஏனென்றால் அவனுக்கு உதவி செய்ய வெளிச்சம் இல்லை” என்றார்.
௧௧ அவர் மேலும், “நமது நண்பன் லாசரு இப்பொழுது தூங்கிக்கொண்டிருக்கிறான். ஆனால் நான் அவனை எழுப்பப்போகிறேன்” என்றார்.
௧௨ அவரது சீஷர்களோ, “ஆண்டவரே, அவன் தூங்கிக்கொண்டிருந்தால் நிச்சயம் குணமாவான்” என்றார்கள்.
௧௩ லாசரு இறந்து போனான் என்பதைக்குறித்தே இயேசு அவ்வாறு சொன்னார். ஆனால் அவரது சீஷர்களோ லாசரு உண்மையில் தூங்குவதாக நினைத்துக்கொண்டனர்.
௧௪ பிறகு இயேசு தெளிவாக, “லாசரு இறந்துபோனான்.
௧௫ அங்கே அப்பொழுது நான் இல்லை என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது என்னை நீங்கள் நம்புவீர்கள். அதனால்தான் மகிழ்கிறேன். நாம் அவனிடம் போவோம்” என்றார்.
௧௬ பிறகு தோமா என்று அழைக்கப்படும் சீஷன், ஏனைய சீஷர்களைப் பார்த்து, “நாமும் அவரோடு போவோம். யூதேயாவில் இயேசுவோடு நாமும் சாவோம்” என்றான்.
பெத்தானியாவில் இயேசு
௧௭ இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கு வந்ததும் லாசரு இறந்துபோனாதாகவும் அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனதாகவும் அறிந்தார்.
௧௮ எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது.
௧௯ யூதர்கள் பலர் மார்த்தாளிடமும் மரியாளிடமும் வந்திருந்தனர். அவர்களின் சகோதரன் லாசருவின் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க வந்தனர்.
௨௦ இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். அவரை வரவேற்க அவள் போனாள். ஆனால் மரியாள் வீட்டிலேயே தங்கிக்கொண்டாள்.
௨௧ மார்த்தாள் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்.
௨௨ ஆனால் இப்பொழுதுகூட நீர் கேட்பவற்றை தேவன் உமக்குத் தருவார்” என்றாள்.
௨௩ இயேசுவோ, “உன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான்” என்றார்.
௨௪ மார்த்தாளோ, “உயிர்த்தெழுதல் நடைபெறும் கடைசிநாளில் அவன் மீண்டும் எழுந்து உயிர் வாழ்வான் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
௨௫ இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான்.
௨௬ என்னில் வாழ்ந்து நம்பிக்கை வைக்கிற எவனும் உண்மையிலேயே இறப்பதில்லை. மார்த்தாளே, இதை நீ நம்புகிறாயா?” எனக் கேட்டார்.
௨௭ “ஆம், ஆண்டவரே. நீர்தான் கிறிஸ்து என்று நம்புகிறேன். நீர்தான் தேவனின் குமாரன். நீரே உலகத்திற்கு வரவிருந்தவர்” என்றாள் மார்த்தாள்.
இயேசு அழுதல்
௨௮ மார்த்தாள் இவ்வாறு சொன்ன பிறகு அவள் தன் சகோதரி மரியாளிடம் திரும்பிச் சென்றாள். அவள் தனியாக அவளிடம் பேசினாள். “இயேசு இங்கே இருக்கிறார். அவர் உன்னை அழைத்தார்” என்றாள் மார்த்தாள்.
௨௯ இதைக் கேட்டதும் மரியாள் எழுந்து இயேசுவிடம் விரைவாகப் போனாள்.
௩௦ இயேசு இன்னும் அக்கிராமத்துக்கு வந்து சேரவில்லை. மார்த்தாள் சந்தித்த இடத்திலேயே அவர் இருந்தார்.
௩௧ யூதர்கள் பலர் மரியாளோடு அவளது வீட்டில் இருந்தனர். அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். மரியாள் எழுந்து வேகமாகச் செல்வதைப் பார்த்து அவள் லாசருவின் கல்லறைக்குப் போகக்கூடும் என எண்ணினர். அவள் அங்கு அழப்போகலாம் என்று கருதி அவளோடு அவர்களும் சென்றனர்.
௩௨ இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் சென்றாள். அவள் இயேசுவைப் பார்த்ததும் குனிந்து அவரை வணங்கினாள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என்னுடைய சகோதரன் இறந்துபோயிருக்கமாட்டான்” என்று சொன்னாள்.
௩௩ மரியாள் அழுவதை இயேசு பார்த்தார். அவளோடு வந்த யூதர்களையும் அவர் கவனித்தார். அவர்களும் அழுதனர். இயேசு மனப்பூர்வமாக வருந்தி, ஆழமாக வேதனைப்பட்டார்.
௩௪ “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவளிடம் கேட்டார்.
அவர்கள் அவரிடம், “கர்த்தரே, வந்து பாரும்” என்றனர்.
௩௫ இயேசு அழுதார்.
௩௬ இதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இயேசு லாசருவை மிகவும் நேசித்திருக்கிறார்” என்றனர்.
௩௭ ஆனால் சில யூதர்களோ, “இயேசு குருடனின் கண்களைக் குணப்படுத்தினார். லாசருவுக்கு உதவிசெய்ய. அவனை ஏன் சாகாமலிருக்கச் செய்திருக்கக் கூடாது?” என்று கேட்டனர்.
லாசருவை உயிர்ப்பித்தல்
௩௮ மீண்டும் இயேசு மனதில் மிகவும் வருத்தம் அடைந்தார். பிறகு லாசரு வைக்கப்பட்ட கல்லைறைக்கு வந்தார். அக்கல்லறை பெரிய பாறையால் அடைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருந்தது.
௩௯ இயேசு, “அந்தப் பாறையை அகற்றுங்கள்” என்றார்.
மார்த்தாளோ, “ஆண்டவரே, லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அதில் கெட்ட நாற்றம் வீசுமே” என்றாள். அவள் இறந்துபோன லாசருவின் சகோதரி.
௪௦ இயேசு மார்த்தாளிடம், “நான் சொன்னவற்றை நினைத்துப்பார். நீ என்னை நம்புகிறதானால் தேவனின் மகிமையை அறியலாம் எனச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.
௪௧ ஆகையால் அவர்கள் அந்தப் பாறையை குகையின் வாசலில் இருந்து அகற்றினார்கள். இயேசு மேலே ஏறிட்டுப் பார்த்து “பிதாவே! நான் சொல்வதை நீர் கேட்டதற்காக நன்றி கூறுகிறேன்.
௪௨ எப்பொழுதும் நான் சொல்வதை நீர் கேட்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் இங்கே கூடியிருக்கிற இம்மக்களுக்காகவே இவற்றைக் கூறுகிறேன். நீர்தான் என்னை அனுப்பினீர் என்று இவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
௪௩ இவ்விதம் சொன்னபிறகு இயேசு உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா” என்று அழைத்தார்.
௪௪ இறந்தவன் வெளியே வந்தான். அவனது கைகளிலும் கால்களிலும் துணிகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் முகத்தை ஒரு துண்டுத் துணி மூடியிருந்தது.
இயேசு மக்களிடம், “துணிகளை அப்புறப்படுத்தி அவனை விடுவியுங்கள்” என்றார்.
யூதத்தலைவர்களின் சதித்திட்டம்
(மத். 26:1–5; மாற். 14:1–2; லூ. 22:1–2)
௪௫ மரியாளைப் பார்ப்பதற்காக ஏராளமான யூதர்கள் வந்திருந்தனர். இயேசு செய்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்களில் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர்.
௪௬ ஆனால், சிலர் பரிசேயர்களிடம் சென்றனர். இயேசு செய்ததை அவர்கள் பரிசேயர்களிடம் சொன்னார்கள்.
௪௭ பிறகு ஆசாரியர்களும் பரிசேயர்களும் யூதர்களின் ஆலோசனைச் சபையைக் கூட்டினர். “இனி என்ன செய்யலாம்? இயேசு பல அற்புதங்களைச் செய்து வருகிறான்.
௪௮ அவனை இவ்வாறு தொடர்ந்து செய்ய அனுமதித்தால் பிறகு மக்கள் அனைவரும் அவனை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பின் ரோமானியர்கள் வந்து நமது ஆலயத்தையும், நாட்டையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
௪௯ அங்கே அவர்களில் ஒருவன் காய்பா. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். அவன் “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
௫௦ நாடு முழுவதும் அழிவதைவிட மக்களுக்காக ஒருவன் இறந்துபோவது நல்லது அல்லவா? இதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை?” என்று சொன்னான்.
௫௧ காய்பா இவற்றைச் சொந்தமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். இயேசு யூத நாட்டுக்காக மரிக்கப்போகிறார் என்பதை அவன் உண்மையில் தீர்க்கதரிசனமாகவே கூறினான்.
௫௨ ஆம். இயேசு யூதர்களுக்காகவே மரிக்கப் போகிறார். உலகில் சிதறிக் கிடக்கிற மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை ஒரே மக்களாக்க அவர் மரிக்கப் போகிறார்.
௫௩ அன்றிலிருந்து யூதத்தலைவர்கள் இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டினர்.
௫௪ ஆகையால் இயேசு யூதர்களின் மத்தியில் வெளிப்படையாக நடமாடுவதை நிறுத்தினார். இயேசு எருசலேமை விட்டு வனாந்தரத்திற்கு அருகிலுள்ள இடத்துக்கு சென்றார். இயேசு எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிற நகரத்துக்குச் சென்றார். அங்கே அவர் தம் சீஷர்களோடு தங்கினார்.
௫௫ யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக்கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர்.
௫௬ மக்கள் இயேசுவை எதிர்ப்பார்த்தனர். அவர்கள் ஆலயத்தில் நின்றுகொண்டு “இயேசு பண்டிகைக்கு வரமாட்டாரா? நீ என்ன நினைக்கிறாய்?” என ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர்.
௫௭ ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்.