௯
பிறவிக் குருடனைக் குணமாக்குதல்
௧ இயேசு நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு குருடனைப் பார்த்தார். அவன் பிறந்தது முதல் குருடனாக இருந்தான்.
௨ இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “போதகரே! இந்த மனிதன் குருடனாகப் பிறந்தான். யார் செய்த பாவம் இவனைக் குருடனாக்கியது? அது இவனது பாவமா? அல்லது இவனது பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்டனர்.
௩ இயேசு அவர்களிடம், “இவனது பாவமோ, இவனது பெற்றோரின் பாவமோ இவனைக் குருடன் ஆக்கவில்லை. நான் இவனைக் குணப்படுத்தும்போது தேவனின் வல்லமை இவன் மூலமாக வெளிப்படும்படியாக இவன் குருடனாகப் பிறந்தான்.
௪ பகலாக இருக்கும்போது மட்டும்தான் என்னை அனுப்பினவருடைய செயல்களை நாம் செய்யவேண்டும். இரவு வந்துகொண்டிருக்கிறது. எவராலும் இரவில் வேலை செய்யமுடியாது.
௫ நான் உலகத்தில் இருக்கும்வரை உலகத்துக்கு நானே ஒளியாக இருக்கிறேன்” என்றார்.
௬ இயேசு இவற்றைச் சொன்ன பிறகு, அவர் புழுதியில் துப்பினார். அதில் சேறு உண்டாக்கினார். அதனை அவனது கண்களின் மேல் பூசினார்.
௭ இயேசு அவனிடம், “போ, சீலோவாம் குளத்தில் (சீலோவாம் என்றால் ‘அனுப்பப்பட்டவன்’ என்று பொருள்) கழுவு” என்றார். அதன்படியே அந்த மனிதன் குளத்திற்குச் சென்றான். அவன் கழுவிவிட்டுத் திரும்பி வந்தான். இப்பொழுது பார்வை பெற்றிருந்தான்.
௮ இவன் இதற்கு முன்னால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததைப் பலர் பார்த்திருந்தனர். அவர்களும் அவனது சுற்றத்தார்களும், “பாருங்கள்! இவன் அங்கே உட்கார்ந்து எப்பொழுதும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அதே மனிதனல்லவா?” என்றனர்.
௯ இன்னும் சிலர், “ஆம். இவன்தான் அவன்”, என்றனர். ஆனால் இன்னும் சிலர், “இல்லை. இவன் அவன் இல்லை. இவன் அவனைப்போன்றே இருக்கிறான்” என்றனர்.
அப்போது அவன் தானாகவே, “முன்பு குருட்டுப் பிச்சைக்காரனாக இருந்தவன் நான்தான்” என்றான்.
௧௦ “என்ன நடந்தது? நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டனர்.
௧௧ அதற்கு அவன், “இயேசு என்று மக்களால் அழைக்கப்படுகிற அந்த மனிதர் ஏதோ சேறு உண்டாக்கினார். அதனை என் கண்களின்மீது தடவினார். பிறகு அவர் என்னிடம் சீலோவாம் குளத்தில் போய் கழுவச் சொன்னார். ஆகையால் நான் போய் கழுவினேன். பின்னர் என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.
௧௨ அந்த மனிதனிடம் மக்கள், “எங்கே அந்த மனிதர்?”
என்று கேட்டனர். அதற்கு அந்த மனிதன் “எனக்குத் தெரியாது” என்று கூறினான்.
இயேசு குணமாக்கிய மனிதனிடம் யூதர்களின் விசாரணை
௧௩ பிறகு மக்கள் பரிசேயரிடம் அந்த மனிதனை அழைத்துச்சென்றனர். குருடாயிருந்த அந்த மனிதன் இவன்தான்.
௧௪ இயேசு சேறு உண்டாக்கி இவனது கண்களைக் குணப்படுத்தினார். அவர் இதனை ஓய்வு நாளில் செய்திருக்கிறார்.
௧௫ ஆகையால் இப்பொழுது பரிசேயர்கள் அந்த மனிதனிடம், “எப்படி நீ பார்வை பெற்றாய்?” என மீண்டும் கேட்டனர். அதற்கு அந்த மனிதன், “அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார். நான் கழுவினேன். இப்பொழுது என்னால் பார்க்க முடிகிறது” என்றான்.
௧௬ சில பரிசேயர்கள், “அந்த மனிதன் ஓய்வு நாள் பற்றிய சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே அவன் தேவனிடமிருந்து வரவில்லை” என்றனர்.
ஆனால் சிலரோ, “பாவம் செய்கிற எந்த மனிதராலும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்ய முடியாதே” என்றனர். யூதர்கள் தங்களுக்குள் ஒத்துப்போகவில்லை.
௧௭ யூதர்கள் குருடனாயிருந்த அந்த மனிதனிடம் மீண்டும் கேட்டார்கள். “இயேசு உன்னைக் குணமாக்கினான். உன்னால் பார்க்க முடிகிறது. அவனைப்பற்றி நீ என்ன சொல்கிறாய்?”
அந்த மனிதன் “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்றான்.
௧௮ அந்த மனிதன் குருடனாயிருந்து பார்வை பெற்றது குறித்து யூதர்களுக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே அந்த மனிதனின் பெற்றோர்களுக்கு ஆளனுப்பினர்.
௧௯ யூதர்கள் அவனது பெற்றோர்களிடம், “இவன் உங்கள் மகன்தானே. அவன் குருடனாகவே பிறந்தான் என்று சொன்னீர்கள். இப்பொழுது அவனால் எவ்வாறு பார்க்கமுடிகிறது?” என்று கேட்டனர்.
௨௦ அதற்கு அவனது பெற்றோர்கள், “இவன் எங்கள் மகன் என்பது எங்களுக்குத் தெரியும். அவன் குருடனாகப் பிறந்தான் என்பதும் தெரியும்.
௨௧ அவன் இப்போது எப்படிப் பார்க்கிறான் என்றும், கண்களைக் குணமாக்கியது யார் என்றும் எங்களுக்குத் தெரியாது. அவனைக் கேளுங்கள். அவனே பதில் சொல்லுகிற வகையில் வளர்ந்திருக்கிறான்” என்றனர்.
௨௨ ஏனென்றால் அவர்களுக்கு யூதத் தலைவர்களைப்பற்றிய அச்சம் இருந்தது. இயேசுதான் கிறிஸ்து என்று சொல்கிற எவரொருவரையும் தண்டித்துவிட வேண்டும் என்று யூதத்தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். அவர்கள் அம்மக்களை வழிபாட்டு இடத்திலிருந்து விலக்கியும் வைப்பர்.
௨௩ எனவே அவனது பெற்றோர்கள். “இவன் வளர்ந்து நிற்கிறவன். அவனையே கேளுங்கள்” என்றனர்.
௨௪ முன்பு குருடனாயிருந்த அந்த மனிதனை மீண்டும் அழைத்தார்கள். யூதத் தலைவர்கள் அவனிடம், “நீ உண்மையைச் சொல்லி தேவனை மகிமைப்படுத்து. இந்த மனிதன் ஒரு பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றனர்.
௨௫ “அவர் பாவியென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒன்று தெரியும். நான் முன்பு குருடனாக இருந்தேன். இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்று அந்த மனிதன் சொன்னான்.
௨௬ அதற்கு யூதத்தலைவர்கள், “உனக்கு அவன் என்ன செய்தான். எப்படி அவன் உன் கண்களைக் குணப்படுத்தினான்?” எனக் கேட்டனர்.
௨௭ “நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் கேட்பதில்லை. ஏன் மீண்டும் அதைக் கேட்க விரும்புகிறீர்கள்? அவரது சீஷராக விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
௨௮ யூதத்தலைவர்கள் கோபம்கொண்டனர். அவனைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினர். “நீதான் இயேசுவின் சீஷன். நாங்கள் மோசேயின் சீஷர்கள்.
௨௯ தேவன் மோசேயிடம் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றனர்.
௩௦ அதற்கு அம்மனிதன் “இது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இயேசு எங்கிருந்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் என் கண்களைக் குணப்படுத்தினார்.
௩௧ பாவிகளுக்கு தேவன் செவிக்கொடுப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம். பக்தியும் கீழ்ப்படிதலும் உள்ள ஒருவனுக்கு தேவன் செவிகொடுப்பார்.
௩௨ பிறவி குருட்டு மனிதனைக் குணப்படுத்திய அற்புதம் முதன் முறையாக இப்போதுதான் நிகழ்ந்துள்ளது.
௩௩ இயேசு தேவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். அவர் தேவனிடமிருந்து வந்திராவிட்டால் அவரால் இதுபோன்ற செயல்களைச் செய்ய இயலாது” என்றான்.
௩௪ அதற்கு யூதத்தலைவர்கள், “நீ முழுவதும் பாவத்தில் பிறந்திருக்கிறாய். நீ எங்களுக்கு உபதேசிக்க முயற்சிக்கிறாயா?” என்று கேட்டனர். பின்னர் அவனை வெளியே தள்ளினர்.
ஆன்மீகக் குருடு
௩௫ அவர்கள் அவனை வெளியேற்றியதை இயேசு அறிந்தார். அவர் அவனிடம் வந்து, “நீ மனிதகுமாரனிடத்தில் நம்பிக்கை உடையவனாக இருக்கிறாயா?” என்று கேட்டார்.
௩௬ அதற்கு அவன், “அவரை நான் நம்பும்படியாக அந்த மனிதகுமாரன் யார் என்று எனக்குச் சொல்லுங்கள்” என்றான்.
௩௭ “நீ ஏற்கெனவே அவரைப் பார்த்திருக்கிறாய். இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருப்பவர்தான் அந்த மனிதகுமாரன்” என்றார்.
௩௮ உடனே அவன், “ஆண்டவரே! நான் நம்புகிறேன்” என்றான். இயேசுவை அவன் குனிந்து வணங்கினான்.
௩௯ “இந்த உலகம் நியாயம் தீர்க்கப்படும்படியாக நான் இந்த உலகத்துக்கு வந்தேன். குருடர்கள் பார்வை பெறும்படியாக நான் வந்தேன். காண்கிறவர்கள் எனத் தம்மை நினைத்துக்கொள்கிறவர்கள் குருடராகும்படியாக நான் வந்தேன்” என்றார் இயேசு.
௪௦ இயேசுவுடன் சில பரிசேயர்களும் இருந்தனர். அவர்கள் இயேசு சொல்வதைக் கேட்டனர். “என்ன? நாங்களும்கூட குருடர்கள் என்றா கூறுகின்றாய்?” எனக் கேட்டனர்.
௪௧ இயேசு அவர்களுக்கு, “நீங்கள் உண்மையிலேயே குருடராயிருந்தால் நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகள் அல்ல. ஆனால் உங்களுக்குப் பார்வை உண்டு என நீங்கள் சொல்வதால், நீங்கள் குற்றவாளிகளே” என்றார்.