௧௦
நல்ல மேய்ப்பனும் ஆடுகளும்
௧ “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான். ௨ ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன். ௩ வாசலைக் காக்கிற காவல்காரன் மேய்ப்பனுக்காகக் கதவைத் திறந்துவிடுவான். ஆடுகள் மேய்ப்பனின் குரலுக்கு செவி கொடுக்கும். மேய்ப்பன் தன் சொந்த ஆடுகளை அவற்றின் பெயரைச் சொல்லி அழைப்பான். அவன் அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போவான். ௪ மேய்ப்பன் தனது ஆடுகளையெல்லாம் வெளியே கொண்டுவந்த பின் அவற்றுக்கு முன்னால் நடந்து அவற்றை நடத்திக்கொண்டு போகிறான். ஆடுகள் அவனது குரல் குறிப்புகளை அடையாளம் கண்டபடியால், அவை அவன் பின்னே செல்கின்றன. ௫ ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று
௬ இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
இயேசுவே நல்ல மேய்ப்பர்
௭ எனவே இயேசு மேலும் சொன்னார், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆடுகளுக்கு நானே வாசலாக இருக்கிறேன். ௮ எனக்கு முன்னால் வந்தவர்கள் அனைவரும் கள்ளரும், கொள்ளைக்காரர்களுமாக இருந்தார்கள். ஆடுகள் அவர்களைக் கவனிக்கவில்லை. ௯ நானே வாசல். என் மூலமாக நுழைகிறவனே மீட்கப்படுவான். அவன் உள்ளேயும் வெளியேயும் போய் மேய்ச்சலைக் கண்டடைவான். ௧௦ திருடன் திருடுவதற்காகவே வருகிறான். அவன் ஆடுகளைக் கொல்லவும் அழிக்கவுமே செய்வான். ஆனால் நானோ ஜீவனைக் கொடுக்க வந்துள்ளேன். அந்த ஜீவன் பூரணமும், நன்மையுமானது.
௧௧ “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான். ௧௨ கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும். ௧௩ அந்த மனிதன் ஓடிவிடுகிறான். ஏனென்றால் அவன் கூலிக்காரன். அவனுக்கு ஆடுகளைப்பற்றிய அக்கறை இல்லை.
௧௪-௧௫ “ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன். ௧௬ எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும். ௧௭ என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன். ௧௮ என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார்.
௧௯ இயேசு சொன்ன இக்காரியங்களினால் மீண்டும் யூதர்கள் பிரிந்துபோயினர். ௨௦ பல யூதர்கள் “பிசாசு அவனுக்குள் புகுந்துகொண்டது. அவன் பைத்தியமாக உளறுகிறான். அவன் கூறுவதை ஏன் கேட்கிறீர்கள்?” என்றனர்.
௨௧ அதற்குப் பதிலாக வேறு சில யூதர்கள், “பிசாசு பிடித்து உளறுகிறவனால் இதுபோன்ற உண்மைகளைப் பேசமுடியுமா? குருடனின் கண்களைப் பிசாசு குணமடையச் செய்யுமா? செய்யாது” என்றனர்.
யூதர்கள் இயேசுவுக்கு எதிராகுதல்
௨௨ அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது. ௨௩ இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார். ௨௪ யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். “இன்னும் எவ்வளவு காலம் உங்களைப்பற்றிப் புதிராக வைத்திருப்பீர்கள். நீங்கள் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்று கேட்டனர்.
௨௫ “நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் நம்பவில்லை. நான் என் பிதாவின் பேரில் அற்புதங்களைச் செய்கிறேன். அந்த அற்புதங்கள் நான் யாரென்று உங்களுக்கு காட்டுகின்றன. ௨௬ ஆனால் நீங்கள் நம்புகிறதில்லை. ஏனென்றால் நீங்கள் எனது ஆடுகள் அல்ல. ௨௭ எனது ஆடுகள் எனது குரலைக் கேட்கும். நான் அவற்றை அறிவேன். அவை என்னைப் பின் தொடரும். ௨௮ நான் என் ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் இறந்துபோவதில்லை. அவைகளை என் கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ளமுடியாது. ௨௯ என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிக்கொள்ளமுடியாது. ௩௦ நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார், இயேசு.
௩௧ மீண்டும் யூதர்கள் அவரைக் கொல்வதற்காகக் கற்களை எடுத்துக்கொண்டனர். ௩௨ ஆனால் இயேசு அவர்களிடம், “நான் என் பிதா மூலமாகப் பல நற்செயல்களைச் செய்தேன். அந்தச் செயல்களை நீங்களும் பார்த்தீர்கள். அவற்றில் எந்த நல்ல செயலுக்காக என்னைக் கல்லெறிய விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.
௩௩ அதற்கு அவர்கள் “நீ செய்த எந்த நல்ல செயல்களுக்காகவும் நாங்கள் உன்னைக் கொல்லவில்லை. ஆனால் நீ சொல்லுகிறவை எல்லாம் தேவனுக்கு எதிராக இருக்கின்றன. நீ ஒரு மனிதன். ஆனால் நீ தேவன் என்று கூறுகிறாய். அதற்காகத்தான் உன்னைக் கல்லால் எறிந்து கொல்லப் பார்க்கிறோம்” என்றனர்.
௩௪ “ ‘தேவர்களாயிருக்கிறீர்கள், என்று நான் சொன்னேன்’ என்பதாக உங்கள் சட்டத்தில் எழுதியிருக்கிறது. ௩௫ தேவனின் செய்தியைப் பெற்றுக்கொண்ட மக்களை தேவர்கள் என்று சொல்லலாம் என பரிசுத்த வேதவாக்கியங்கள் கூறுகின்றன. வேதவாக்கியங்கள் எப்போதும் உண்மையானவை. ௩௬ ஆகவே, ‘நான் தேவனின் குமாரன்’ என்று கூறியதை, தேவனுக்கு எதிராகப் பேசுவது என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டவன் நான்தான். ௩௭ என்னுடடைய பிதா செய்தவற்றை நான் செய்யாவிட்டால் நீங்கள் என்னை நம்பவேண்டியதில்லை. ௩௮ ஆனால் எனது பிதா செய்தவற்றை நானும் செய்வேனானால் நீங்கள் என்னை நம்பித்தான் ஆகவேண்டும். நீங்கள் என்னை நம்புவதில்லையானாலும் நான் செய்கின்றவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். நான் பிதாவிடமும் பிதா என்னிடமும் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார், இயேசு.
௩௯ யூதர்கள் இயேசுவைப் பிடிக்க மீண்டும் முயன்றார்கள். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார்.
௪௦ பிறகு இயேசு யோர்தான் நதியைக் கடந்து திரும்பிப் போனார். யோவான் முன்பு ஞானஸ்நானம் கொடுத்த இடத்துக்குப் போனார். அங்கே அவர் தங்கினார். ௪௧ அவரிடம் பலர் வந்தனர். “யோவான் எவ்வித அற்புதமும் செய்யவில்லை. ஆனால் இயேசுவைப்பற்றி அவன் சொன்னவை எல்லாம் உண்மையாக இருக்கின்றன” என்றனர். ௪௨ அங்கே அநேக மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தனர்.
௧௦:௩௪ சங்கீதம் 82:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.