11
இரண்டு சாட்சிகள்
1 அப்பொழுது அளவுகோலைப் போன்ற ஒரு பிரம்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. பின்பு எனக்குச் சொல்லப்பட்டதாவது: “போ, இறைவனுடைய ஆலயத்தையும் பலிபீடத்தையும் அளவிடு. அங்கே ஆராதனை செய்கிறவர்களையும் கணக்கெடுத்துக்கொள்.
2 ஆனால், வெளிமுற்றத்தை விட்டுவிடு; அதை அளக்காதே. ஏனெனில், அது யூதரல்லாத மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் 42 மாதங்களுக்கு பரிசுத்த நகரத்தை மிதிப்பார்கள்.
3 நான் என்னுடைய இரண்டு சாட்சிகளுக்கும், வல்லமை கொடுப்பேன். அவர்கள் துக்கவுடையை உடுத்திக்கொண்டு, 1,260 நாட்களுக்கு இறைவாக்கு உரைப்பார்கள்.
4 பூமியின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும்” இரண்டு குத்துவிளக்குகளும் இவர்களே.
5 யாராவது அவர்களுக்குத் தீங்குசெய்ய முயன்றால், அவர்களுடைய வாய்களிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அவர்களுடைய பகைவர்களை அழித்துப்போடும். அவர்களுக்குத் தீங்குசெய்ய விரும்புகின்றவர்கள் இவ்விதமாகவே சாகவேண்டும்.
6 இவர்கள் தாங்கள் இறைவாக்கு உரைக்கும் காலத்தில், மழை பெய்யாதபடி வானத்தை அடைத்துப் போடுவதற்கு, வல்லமை உடையவர்களாய் இருப்பார்கள்; அவர்கள் தண்ணீரை இரத்தமாக மாற்றுவதற்கும், தாங்கள் விரும்பியபோதெல்லாம், எல்லா விதமான வாதைகளினாலும் பூமியைத் தண்டிப்பதற்கும் அதிகாரம் பெற்றிருப்பார்கள்.
7 அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகிற மிருகம், அவர்களைத் தாக்கும். அது அவர்களை மேற்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும்.
8 அப்பொழுது அந்த சாட்சிகளுடைய உடல்கள், அந்தப் பெரிய நகரமான எருசலேமின் வீதியில் கிடக்கும். இந்தப் பெரிய நகரம் அடையாளமாக சோதோம் என்றும், எகிப்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்திலேதான், அவர்களுடைய கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார்.
9 மூன்றரை நாட்களுக்கு எல்லா மக்களையும், கோத்திரங்களையும், மொழியினர்களையும், நாடுகளையும் சேர்ந்த மக்கள் அவர்களுடைய உடல்களை உற்றுப்பார்ப்பார்கள். அந்த உடல்களை அடக்கம் செய்ய, அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
10 பூமியில் குடியிருக்கிறவர்கள், அவர்களை ஏளனம் செய்து மகிழுவார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகளை அனுப்பி கொண்டாடுவார்கள். ஏனெனில், இந்த இரண்டு இறைவாக்கினரும், பூமியில் வாழுகிறவர்களை துன்புறுத்தி, வேதனைப்படுத்தி இருந்தார்கள்.
11 ஆனால் மூன்றரை நாட்ளுக்குப்பின், இறைவனிடமிருந்து உயிர்மூச்சு அவர்களுக்குள் வந்தது, அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களைக் கண்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
12 பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு குரல் அந்த இரண்டு சாட்சிகளையும் நோக்கி உரத்தசத்தமாக, “இங்கே மேலே வாருங்கள்” என்று சொன்னது. அவர்கள் ஒரு மேகத்திலே, பரலோகத்தை நோக்கி மேலே போனார்கள்; அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே, இது நடந்தது.
13 அந்நேரத்திலேயே, அங்கு ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது; அதனால் அந்தப் பட்டணத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது. அந்தப் பூமியதிர்ச்சியில், ஏழாயிரம்பேர் கொல்லப்பட்டார்கள்; அதற்குத் தப்பியவர்களோ, பயந்தவர்களாய் பரலோகத்தின் இறைவனுக்கு மகிமையைச் செலுத்தினார்கள்.
14 இரண்டாவது பயங்கரமும் கடந்துபோயிற்று; மூன்றாவது வேதனையோ சீக்கிரமாய் வருகிறது.
ஏழாவது எக்காளம்
15 ஏழாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது பரலோகத்தில் உரத்த சத்தமான குரல்கள் சொன்னதாவது:
“உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும்,
அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகிவிட்டது.
அவரே என்றென்றுமாக அதை ஆளுகை செய்வார்.”
16 அப்பொழுது இறைவனுக்கு முன்பாக, தங்களுடைய அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும், முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டார்கள்.
17 அவர்கள் சொன்னதாவது:
“இருக்கிறவரும் இருந்தவருமான எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே,
உமக்கே நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
ஏனென்றால், நீர் உம்முடைய மிகுந்த வல்லமையை எடுத்துக்கொண்டு
ஆளுகை செய்யத் தொடங்கிவிட்டீர்.
18 ஜனங்கள் கோபங்கொண்டார்கள்,
உம்முடைய கோபமும் வந்துவிட்டது.
இறந்தவர்களை நியாயந்தீர்க்கும் வேளை வந்துவிட்டது,
உம்முடைய ஊழியக்காரர்களாகிய இறைவாக்கினருக்கும், உம்முடைய பரிசுத்தவான்களுக்கும்,
உம்முடைய பெயரில் பயபக்தியாயிருக்கிற சிறியோர் பெரியோர் யாவருக்கும்,
வெகுமதி கொடுக்கும் வேளையும் வந்துவிட்டது.
பூமியை அழிக்கிறவர்களை, அழிக்கும் வேளையும் வந்துவிட்டது.”
19 பின்பு பரலோகத்திலுள்ள, இறைவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது; அப்போது அவருடைய ஆலயத்திலுள்ள அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. அவ்வேளையில் மின்னல்களும், பேரிரைச்சல்களும், இடிமுழக்கத்தின் சத்தங்களும், பூமியதிர்ச்சியும், பெரிய கல்மழையும் ஏற்பட்டன.