12
பெண்ணும் இராட்சதப் பாம்பும்
1 பரலோகத்தில் ஒரு பெரிய அதிசயமான அடையாளம் தோன்றியது: சூரியனை உடையாக உடுத்திக்கொண்டிருந்த, ஒரு பெண் காணப்பட்டாள். அவளது பாதங்களின்கீழே சந்திரன் இருந்தது, அவளது தலையின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுடைய ஒரு கிரீடம் இருந்தது.
2 அவள் கர்ப்பவதியாயிருந்தாள்; அவள் பிள்ளைபெறும் தருவாயில் இருந்தபடியினால், வேதனையில் கதறினாள்.
3 அப்பொழுது பரலோகத்திலே இன்னொரு அடையாளம் தோன்றியது, மிகப்பெரிதான சிவப்பு நிறமுடைய ஒரு இராட்சதப் பாம்பு காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும், பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் ஏழு தலைகளின்மேலும், ஏழு கிரீடங்கள் இருந்தன.
4 அதனுடைய வால், வானத்திலிருந்து நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை வாரி எடுத்து, அவைகளை பூமியின்மேல் வீசியெறிந்தது. அந்த இராட்சதப் பாம்பு பிரசவிக்கும் தருவாயிலிருந்த, அந்தப் பெண்ணுக்கு முன்பாக நின்றது. அவள் குழந்தையைப் பெற்ற உடனேயே, அந்தக் குழந்தையை விழுங்கும்படியாகவே, அது அவள்முன் நின்றது.
5 அவள் பெற்றெடுத்த ஆண் பிள்ளையே, “எல்லா மக்களையும் இரும்புச் செங்கோலைக் கொண்டு ஆளுகை செய்வார்.” அவளுடைய பிள்ளை, மேலே இறைவனிடத்திற்கும், அவருடைய அரியணைக்கும் பறித்துக்கொள்ளப்பட்டது.
6 அந்தப் பெண்ணோ பாலைவனத்திற்கு தப்பி ஓடினாள். அங்கு இறைவனால் ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்திற்கு 1,260 நாட்களுக்குப் பராமரிக்கப்பட்டாள்.
7 பரலோகத்தில் யுத்தம் நடந்தது. மிகாயேலும், அவனுடைய தூதர்களும் அந்த இராட்சதப் பாம்புக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். அந்த இராட்சதப் பாம்பும், அதனுடைய தூதர்களும், அவர்களை எதிர்த்து யுத்தம் செய்தன.
8 ஆனால், அந்த இராட்சதப் பாம்பு தோல்வியுற்றது. அதனாலே பரலோகத்தில் அவை தங்களுக்குரிய இடத்தை இழந்து போயின.
9 அந்தப் பெரிய இராட்சதப் பாம்பு கீழே தள்ளப்பட்டது. இதுவே பிசாசு என்றும், சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட ஆதியிலே இருந்த பாம்பு. முழு உலகத்தையும் ஏமாற்றுகிறவன் இவனே. அவனும், அவனுடைய தூதர்களும் பூமியிலே விழும்படி தள்ளப்பட்டார்கள்.
10 அப்பொழுது பரலோகத்திலே உரத்த சத்தமான ஒரு குரல் இவ்வாறு சொல்வதை நான் கேட்டேன்:
“இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது இறைவனுடைய அரசும் வந்துவிட்டன.
அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் வந்துவிட்டது.
ஏனெனில் நம்முடைய சகோதரர்களைக் குற்றம் சாட்டுகிறவன்
கீழே வீசித் தள்ளப்பட்டான்.
இவனே நம்முடைய இறைவனுக்கு முன்பாக,
இரவும் பகலும் அவர்களைக் குற்றம் சாட்டுகிறவன்.
11 ஆனால் அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய
இரத்தத்தினாலும், தங்களுடைய சாட்சியின் வார்த்தையினாலும்
அவனை மேற்கொண்டார்கள்.
அவர்கள் தங்களுடைய உயிர்களை நேசிக்கவில்லை.
அதனால் மரணத்துக்கும் அஞ்சவில்லை.
12 ஆகையால் பரலோகங்களே! அவைகளில் குடியிருக்கிறவர்களே!
நீங்கள் சந்தோஷப்படுங்கள்.
பூமியே, கடலே ஐயோ கேடு,
ஏனெனில் பிசாசு கீழே உங்களிடம் வந்திருக்கிறான்!
அவன் தன்னுடைய நாட்கள் கொஞ்சம் என்பதை அறிந்ததினால்,
கடுங்கோபம் கொண்டிருக்கிறான்.”
13 அந்த இராட்சதப் பாம்பு, தான் பூமியின்மேல் எறியப்பட்டதைக் கண்டபோது, அது அந்த ஆண்குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துரத்திச்சென்றது.
14 அந்தப் பெண்ணுக்கு, ஒரு பெரிய கழுகினுடைய இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டிருந்தன. இதனால் அவள், பாலைவனத்திலே தனக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்திற்கு பறந்து போகக்கூடியதாயிருந்தது. அங்கே அவள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும், அந்த இராட்சதப் பாம்பின் பிடியில் அகப்படாமல் பராமரிக்கப்படுவாள்.
15 அப்பொழுது அந்த இராட்சதப் பாம்பு, அந்தப் பெண்ணை வெள்ளப்பெருக்கால் வாரிக்கொண்டுபோகும்படி, தன் வாயிலிருந்து நதிபோன்று தண்ணீரைக் கக்கியது.
16 ஆனால் பூமியோ தன் வாயைத் திறந்து, அந்த இராட்சதப் பாம்பு தன் வாயிலிருந்து கக்கிய அந்தத் தண்ணீரை விழுங்கி, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தது.
17 அப்பொழுது அந்த இராட்சதப் பாம்பு, அந்தப் பெண்ணின்மேல் கடுங்கோபங்கொண்டு, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவினுடைய சாட்சியைக் காத்துக்கொள்கிற மீதியான அவளது பிள்ளைகளுக்கு எதிராக யுத்தம் செய்யும்படி போனது.