5
காதலன்
என் சகோதரியே, என் மணவாளியே, நான் என் தோட்டத்திற்கு வந்துள்ளேன்;
என் நறுமணப் பொருட்களுடன் என் வெள்ளைப்போளத்தையும் சேர்த்துக்கொண்டேன்.
என்னுடைய தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்;
நான் என்னுடைய திராட்சை இரசத்தையும் என் பாலையும் குடித்தேன்.
தோழியர்
நண்பர்களே, சாப்பிடுங்கள், குடியுங்கள்;
அன்பர்களே, திருப்தியாய்க் குடியுங்கள்.
காதலி
நான் உறங்கினேன், என் இருதயமோ விழித்திருந்தது.
கேளுங்கள், என் காதலர் கதவைத் தட்டுகிறார்:
“என் சகோதரியே, என் அன்பே,
என் புறாவே, என் உத்தமியே, கதவைத்திற.
என் தலை பனியால் நனைந்திருக்கிறது,
என் தலைமுடி இரவின் தூறலினால் நனைந்திருக்கிறது” என்கிறார்.
நான் என் உடைகளைக் கழற்றிவிட்டேன்;
அவற்றைத் திரும்பவும் நான் உடுக்க வேண்டுமோ?
நான் என் கால்களைக் கழுவிவிட்டேன்;
அவற்றைத் திரும்பவும் நான் அழுக்காக்க வேண்டுமோ?
என் காதலர் கதவுத் துவாரத்தின் வழியாகத் தன் கையை நுழைத்தார்;
என் உள்ளம் அவரைக்காண துடித்தது.
நான் என் காதலருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்,
என் கையிலிருந்து வெள்ளைப்போளம் வடிந்தது;
கதவின் பிடியில் என் கைவிரல்கள்
வெள்ளைப்போளத்தைச் சிந்தின.
நான் என் காதலருக்காகக் கதவைத் திறந்தேன்,
ஆனால் என் காதலரோ அங்கு இல்லை; அவர் போய்விட்டார்.
அதினால் என் உள்ளம் ஏங்கியது.
நான் அவரைத் தேடினேன்; அவரைக் காணவில்லை.
நான் கூப்பிட்டேன்; அவர் பதில் கொடுக்கவில்லை.
காவற்காரர்கள் பட்டணத்தைச்சுற்றி வரும்போது,
என்னைக் கண்டார்கள்.
அவர்கள் என்னை அடித்தனர், காயப்படுத்தினர்,
என் மேலுடையை எடுத்துக்கொண்டார்கள்;
அவர்கள் அரணைக் காவல் செய்வோர்!
எருசலேம் மங்கையரே,
நான் உங்களுக்கு ஆணையிட்டுச் சொல்கிறேன்;
நீங்கள் என் காதலரைக் காண்பீர்களானால் என்னத்தைச் சொல்வீர்கள்?
காதலினால் மயங்கியிருக்கிறேன் என்று சொல்லுங்கள்.
தோழியர்
பெண்களுள் பேரழகியே,
உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்?
நீ இவ்விதம் ஆணையிட்டுச் சொல்லும் அளவுக்கு
உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்?
காதலி
10 என் காதலர் பிரகாசமான* சிவந்த தோற்றமுள்ளவர்,
பத்தாயிரம் பேருக்குள் அதிசிறந்தவர்.
11 அவருடைய தலை சுத்தமான தங்கமாயிருக்கிறது;
தலைமயிரோ சுருள் சுருளாகவும்
காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
12 அவருடைய கண்களோ
பாலில் குளித்து,
நீரூற்றருகே தங்கும் புறாக்களைப்போலவும்,
பதிக்கப்பட்டக் கற்களைப்போலவும் இருக்கின்றன.
13 அவர் கன்னங்கள் நறுமணச்செடிகள் முளைக்கும்
பாத்திகள்போல் இருக்கின்றன.
அவருடைய உதடுகள் வெள்ளைப்போளம்
வடிகின்ற லில்லிப் பூக்களைப்போல் இருக்கின்றன.
14 அவருடைய புயங்களோ கோமேதகம்
பதித்த தங்க வளையல்களைப்போல் இருக்கின்றன.
அவருடைய வயிறு நீலக்கற்களினால் அலங்கரிக்கப்பட்ட,
துலக்கிய தந்தம்போல் இருக்கின்றது.
15 அவருடைய கால்களோ சுத்தத்தங்கத்தால்
அடித்தளமிடப்பட்ட பளிங்குத் தூண்களாய் இருக்கின்றன.
அவருடைய தோற்றமோ லெபனோனைப்போலவும்
அது சிறந்த கேதுரு மரங்களைப் போலவும் இருக்கிறது.
16 அவருடைய வாய் இனிமையானது;
அவர் முற்றிலும் அழகானவர்.
எருசலேமின் மங்கையரே,
இவரே என் காதலர், இவரே என் நண்பர்.
* 5:10 5:10 பிரகாசமான அல்லது வலிமை உடையவர், அவருக்கு நிகரானவர் எவருமில்லை.