சங்கீதம் 7
பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தையினிமித்தம் யெகோவாவை நோக்கி தாவீது பாடிய பாடல். 
 
1 என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்;  
என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும்.   
2 எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,  
விடுவிக்கிறவன் இல்லாததால்,  
அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.   
3 என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும்,  
என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும்,   
4 என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும்,  
காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,   
5 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து,  
என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து,  
என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா)   
6 யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து,  
என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி,  
எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.   
7 மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்;  
அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.   
8 யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்;  
யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும்  
எனக்கு நியாயம்செய்யும்.   
9 துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக;  
நீதிமானை நிலைநிறுத்தும்;  
நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும்,  
சிந்தைகளையும் சோதித்தறிகிறவர்.   
10 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.   
11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி;  
அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.   
12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்;  
அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.   
13 அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்;  
தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார்.   
14 இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்;  
தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.   
15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்;  
தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.   
16 அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும்,  
அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும்.   
17 நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன்.  
நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.